விவசாயிகள் போராட்டம் 

 
தமிழகம்

“இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்திய - அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் பொருட்களை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட பி.ஆர்.பாண்டியன், இந்த ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு, அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜூன் 23, 24 ,25 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. 25-ஆம் தேதி ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சமியுத்த கிசான் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்கித்சிங் தல்லேவால் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணப்புக் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டு பேசியது: “ஏற்கெனவே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர்.

விவசாயிகள் இந்தியாவில் உற்பத்தி செய்கிற பொருட்களை வரியின்றி தடையின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சந்தைப்படுத்தி கொள்வதற்கு வழிவகுக்கும். நாடாளுமன்றத்தில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு மத்திய அரசு அனுமதிக்க முன்வரவில்லை. இந்திய விவசாயிகளிடமும் கருத்து கேட்கவில்லை.

இந்நிலையில் தன் விருப்பத்திற்கு மத்திய அரசு, அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை தடையில்லாமல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் சார்பில் இப்போராட்டத்தில் அபிமன்யூகொஹார், கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT