கோப்புப் படம்
சென்னை: பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 8.38 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரத்தில் சென்னைக்கான 2-வது விமான நிலையத்தை மத்திய அரசுடன் இணைந்து அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31-ல் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் சிப்காட் நிறுவனம் மூலம் காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அறிவிக்கை வெளியீடு
இந்நிலையில் பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 8.38 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி அரசிதழில் வெளியிட்டுள்ளார்.
அதில், `உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட் நிதியிலிருந்து வழங்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் வரைபடங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள், மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் வேலைநாட்களில் நேரில் பார்வையிடலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த நில எடுப்பு அறிவிக்கைக்கு மதுரமங்கலம் பகுதிகளில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்தி புதிய தொழிற்பூங்கா அமைப்பது ஏற்புடையதல்ல.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த அரசு, எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது எப்படி நியாயமாகும்? ஏகனாபுரத்துக்கு ஒரு நீதி, மதுரமங்கலத்துக்கு ஒரு நீதியா? என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏற்கெனவே விமான நிலைய எதிர்ப்பால் பரபரப்பாக இருந்த பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில், சிப்காட் திட்டத்துக்கான புதிய நில எடுப்பு அறிவிப்பு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.