கன்னியாகுமரியில் நேற்று யாத்திரையைத் தொடங்கிய, ஐக்கிய விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையிலான விவசாயிகள்.
நாகர்கோவில்: அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான விவசாயிகள் யாத்திரை நேற்று தொடங்கியது.
எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 வாகனங்களில் 30 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் வரை யாத்திரை செல்கின்றனர்.
குமரி காந்தி மண்டபம் முன்புநேற்று தொடங்கிய யாத்திரை, நெல்லை மதுரை, சென்னை வழியாக பல்வேறு மாநிலங்களைக் கடந்து, வரும் மார்ச் 15-ம் தேதி காஷ்மீரை அடைகிறது. மார்ச் 19-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது.
குமரியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் சங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் அய்யாக்கண்ணு, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.14.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலைதொடர்கிறது. விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை.
2014 தேர்தலின்போது பாஜகவின் அறிக்கையில், எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவதாகவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒப்புதலோடு, மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். யாத்திரையில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அந்தந்த மாநிலங்களில் விவசாயிகள் மகாசபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மதுரையிலும், நாளை நாகையிலும், வரும் 10-ம் தேதி காலையில் சேலத்திலும் மகாசபைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அடுத்து கர்நாடகாவுக்குள் பேரணி பயணிக்கிறது. தமிழக முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி கோரி இருக்கிறோம். அவர் அனுமதி தந்தால் வரும் 9-ம் தேதி சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.