தஞ்சாவூர்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பயிர்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ரூ. 75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் முழு கடன் தள்ளுபடி, மற்ற விவசாயிகள் அனைவருக்கும் ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி என்ற அறிவிப்பு சரித்திரத்திலேயே இல்லாத ஒன்றாகும். பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றார்போல் கடன் அளவும் வேறுபடும் என்பதை தவெக அரசு உணரவில்லை. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் ரூ.50,000, ரூ.75,000 என கந்து வட்டிக்காரர்போல கடன் வரம்பை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது.
பாமக தலைவர் அன்புமணி: கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இந்த அறிவிப்பு தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும். “மாற்றம்” கொண்டு வருவதாக முதல்வர் விஜய் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: விவசாயிகளின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: பயிர்க்கடன் அறிவிப்பு கடல் நீரில் பெருங்காயத்தை கரைப்பது போன்ற செயலாகும். தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பும் ஏமாற்றும் வகையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாக்குறுதிப்படி கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: முழுமையாக தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜுன் 22-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: தமிழக அரசு தற்போது உயர்த்தி அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை போதாது. இதேபோல, முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர். கே.எஸ்.முகமது இப்ராஹிம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், கணபதியக்ரஹாரம் சீனிவாசன், நெய்குப்பை கலைமணி ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.