தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கணக்குகள் முடக்கப்படுவதால், கடன் பெறுவதற்காக மீண்டும் அந்த கணக்கை புதுப்பிக்க சிரமப்படுகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன், கால்நடை கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்கினாலும், அதற்குரிய தொகையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் இருந்தே எடுக்க முடியும்.
இதற்காக கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், விவசாயிகள் கடன் தவணை தொகையை கூட்டுறவு சங்கங்களிலேயே செலுத்தினால் போதும்.
இதனால் விவசாயிகள் கடன்பெறும் சமயங்களில் மட்டுமே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளுக்குச் செல்வர். தவணை செலுத்த செல்வதில்லை. அதேபோல், கடன் பெறாத விவசாயிகளும் செல்வதில்லை.
இந்நிலையில், பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளவில்லை என்று கூறி விவசாயிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் கடன் பெறும் சமயங்களில் விவசாயிகள் மீண்டும் வங்கிக் கணக்கை புதுப்பித்து, பணத்தை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பணம் கிடைக்க தாமதமாகிறது.
இதுகுறித்து விவசாயி மணல்மேடு ராஜா கூறியதாவது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விவசாயிகளின் கணக்குகள் அடிக்கடி முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் ஆண்டுக்கு குறைந்தது 100 பேராவது பாதிக்கப்படுகின்றனர். வங்கிக் கணக்கை புதுப்பிக்க மீண்டும் புகைப்படம், ஆதார் உள்ளிட்ட ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அப்படியே விண்ணப்பத்தாலும் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வர சில மாதங்கள் ஆகின்றன. இதனால், எப்போதும் வங்கி கணக்கை முடக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கூறியதாவது: மத்திய கூட்டுறவு வங்கி கணக்கை ஓராண்டாக பயன்படுத்தாவிட்டால் தானாக முடங்கிவிடும். அதன் பின்னர் விவசாயிகளிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகியவற்றை வாங்கி எங்களுக்குரிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைக்கு அனுப்புவோம்.
அவர்கள் அங்கிருந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வங்கி கணக்கு முடக்கத்தை சீர் செய்கின்றனர். இதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், கடந்த காலங்களை போன்று கூட்டுறவு கடன் சங்கங்களுக்குரிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையிலேயே ஒப்புதல் கொடுத்தால் தாமதம் ஏற்படாது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.