தமிழகம்

திருத்தியமைக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி

செய்திப்பிரிவு

தஞ்சாவூா்: கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடியில், காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

அதன்படி, 1.5.2025 முதல் 28.2.2026 வரை என்பதில் இருந்து 1.5.2025 முதல் 31.3.2026 வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன்பெற்ற 5,90,621 விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவது மாகவும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க் கடன் பெற்ற 7,34,260 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வரையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன் மூலம் ரூ.8,312.21 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர் என தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தர விமல்நாதன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன், கல்லணைக் கால்வாய் பாசனதாரர் கூட்டமைப்பு சங்க தலைவர் புலவன்காடு மாரியப்பன் ஆகியோர் கூறியது:

தமிழக அரசு பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரத்தில் இன்னும் தெளிவாக எதையும் அறிவிக்கவில்லை.

விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக ஒரு மாத காலம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1.5.2025-க்கு முன்பாக பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தையே தருகிறது. பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு 2 முறை அரசாணை வெளியிட்டும், விவசாயிகளின் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை. தவெக தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகளுக்கான பயிர்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT