தமிழகம்

“விவசாயிகள் பாவம் சும்மா விடாது” - முதல்வர் விஜய்க்கு செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எச்சரிக்கை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “விவசாயிகள் பாவம் உங்களை சும்மா விடாது” என்று முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், அதிமுக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு மேகேதாட்டு பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்தும், காவியில் தமிழகத்திற்குரிய பங்கீட்டு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த மதுரை அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.

ராஜன் செல்லப்பா பேசுகையில், “சோதனைகளை வென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்றைக்கு சாதனை படைத்துள்ளார். அதிமுகவின் பத்து ஆண்டு கால ஆட்சியில் ரூ.23,000 கோடி வரை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி ஒரு பொற்காலம். ஆனால், தவெக ஆட்சியில் காவேரி நீர் இரண்டு மாதமாக திறக்கவில்லை‌. விஜய்யின் 100 நாள் ஆட்சியில் தமிழகத்தின் உரிய நீரை பெற முடியவில்லை. தற்போது உபரி நீர்தான் வருகிறது.

கனமழை, வெள்ளம் ஆகிய காலங்களில் இதுபோன்ற மோசமான நிலை வரும். அதுபோன்று இன்றைக்கு விஜய்யின் 100 நாள் ஆட்சி தமிழகத்தில் மோசமான நிலையை உருவாக்கி உள்ளது. இந்த 100 நாட்களில் ரியல் ஆட்சியாக நடத்தவில்லை. ரீல்ஸ் ஆட்சியாகத்தான் நடைபெறுகிறது. இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் கடன் வைத்திருந்தால் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு அதை ரத்து செய்யவில்லை” என்றார்.

ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “விவசாயிகள் படும் வேதனைகளை கண்டு கொள்ளாமல் தவெக அரசு, இன்று தொழில் முதலீடு, வெற்றி ஆட்சி என தம்பட்டம் அடிக்கிறார்கள். விவசாயிகள் பாவம் உங்களை சும்மா விடாது. பழனிசாமி முதல்வராக வந்திருந்தால் விவசாயிகளுடைய பயிர்க் கடனை முழுவதுமாக ரத்து செய்து இருப்பார். சட்டமன்றத் தேர்தலில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, ரூ.4,000 படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும், ஆறு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்கள்.

தற்போது உரிமைத்தொகை 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும் என்கிறார்கள். இதுவெல்லாம் விஜய்க்கு தெரியாமல் அறிவித்தார்களா?

கடந்த மூன்று மாதம் ஆட்சியில் ரூ.22 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டார். இப்படிச் சென்றால் தமிழகத்தின் கடன் சுமை 20 லட்சம் கோடியாக உயர்ந்து தமிழகம் திவாலாகிவிடும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், முதல்வர் விஜய், ‌தமிழக மக்களுக்கு இன்றைக்கு பட்டை நாமம் சாத்திவிட்டார். பிள்ளை பிடிப்பவர் போல் அதிமுகவில் உள்ளவர்களை ஆசை வார்த்தை கூறி விஜய் இழுக்கிறார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவிற்காக நாங்கள் தற்கொலைப் படையாக மாறுவோம்” என்றார்.

செல்லூர் கே.ராஜு பேசுகையில், “காவிரி பிரச்சினையிலும், முல்லை பெரியார் பிரச்சினையிலும் நீதிமன்றம் சென்று தமிழகத்திற்கு வெற்றி தீர்ப்பை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்று தந்தார். ஆனால், இன்று எதற்கெடுத்தாலும் வெற்றி, வெற்றி என்று கூறும் முதல்வர் விஜய், காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக பெற்றுக் கொடுத்த வெற்றியை தக்க வைக்க முடியவில்லை.

2016 அதிமுக ஆட்சியில் ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2021-ம் ஆண்டு 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளுக்கு ரூ.12, 110 கோடி பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது.

அது மட்டுமில்லாதது கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புயல்களில் நிவாரணமாக விவசாயிகள் வழங்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடியே 58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.32,470 கோடி உதவி தொகை வழங்கப்பட்டது. இன்று சட்டப்பேரவை மழலை சபை கூடமாக மாறிவிட்டது” என்றார்.

SCROLL FOR NEXT