திருவாரூர்: வேளாண்மையை விட்டு வெளியேறுவது ஆரோக்கியமான போக்கு என்று திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறியிருப்பதற்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வேளாண் பங்களிப்பு குறைந்து கொண்டே வருவதாகவும், 25 சதவீதம் பேர் மட்டுமே வேளாண்மையில் ஈடுபடுவதாகவும், அதுதான் தமிழகத்துக்கு நல்லது எனவும் தமிழக திட்டக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சனின் கூறியுள்ளார்.
இது விவசாயிகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. தொழிற்புரட்சி என்கிற பெயரில் விளைநிலங்களை அபகரிக்கும் உள்நோக்கம் கொண்ட கார்ப்பரேட் கொள்கைகளை திமுக அரசு கடைபிடிப்பதையே, அவரது அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாயிகள் சங்கமாநிலப் பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விவசாயத்தால் வேலைவாய்ப்புகள் கிடையாது என்ற ஜெயரஞ் சனின் கூற்றுஉண்மையாக இருக்குமேயானால், கிராமங்கள்தோறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மாறாக, உண்மைக்குப் புறம்பாக விவசாயத்துக்கு எதிரான கருத்துகளை ஜெயரஞ்சன் மூலம் பேச வைப்பது, தேர்தல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.