சேலம்: ‘திமுக அரசின் அலட்சியத்தால் தான் விவசாயிகள் பாதிக்கப்பட் டுள்ளனர்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக டிஜிபி நியமனத்தில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசு, மத்திய பணியாளர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த 3 பேரும் இவர்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என கருதிதான், இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. இதுதான் உண்மை.
டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் விளைச்சல் எவ்வளவு வரும் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது முன்கூட்டியே திட்டமிட்டு விவசாயிகள் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வந்தவுடன் கொள்முதல் செய்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. முழுக்க முழுக்க திமுக அரசின் அலட்சியத்தால் தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைக்கு என்னைப்பற்றி ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பச்சைத் துண்டு போட்ட பழனிசாமி என்று பேசியிருக்கிறார். உண்மைதான். நான் விவசாயிதான். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, நான் முதன்முதலாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனதில் இருந்து இதுநாள் வரை விவசாயம் செய்து வருகிறேன்.
மத்திய அரசு ஈரப்பதம் குறித்து என்ன காரணம் சொன்னார்கள் என்பதை இதுவரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஜால்ரா போடும் கட்சி நாங்கள் இல்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்தனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது, 22 நாட்கள் மக்களவையை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தற்போது 39 மக்களவை உறுப்பினர்கள் இருந்து என்ன பிரயோஜனம். மக்கள் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் பாதிக்கப்படும்போது மத்திய அரசோடு வாதாடி போராடுவதற்குத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
எஸ்ஐஆர் பணி நடக்கக்கூடாது என்பதில் திமுக குறியாக இருக்கிறது. எஸ்ஐஆர் பணி நடந்தால் இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு விடும். ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் இருந்தால்தான் அந்த வாக்குகளை பயன்படுத்தி திமுகவால் வெற்றி பெற முடியும். இது திமுகவுக்கு கை வந்த கலை. அதனால்தான் எஸ்ஐஆர் வரக்கூடாது என திமுகவினர் துடிக்கிறார்கள். நேர்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்க ளுடைய நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.