சேலம்: உயிரியல் பூங்காவில் உள்ள வங்க நரியைப் பொங்கல் பண்டிகையன்று தங்களுக்குக் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் விவசாயி ஒருவர் விடுத்த கோரிக்கை, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று, வேளாண்மை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற வாழப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்ற விவசாயி, “நாங்கள் 3 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடவில்லை. இந்த ஆண்டு சேலம் உயிரியல் பூங்காவில் உள்ள வங்க நரியைக் கொண்டு வந்து எங்களுக்குக் காட்டுங்கள். அதைப் பார்த்தால்தான் எங்களால் பொங்கல் கொண்டாட முடியும்.
சேலம் புத்தகத் திருவிழா விளம்பரத்துக்கு வங்க நரியை சின்னமாக வெளியிடுகிறீர்கள். எங்கள் பொங்கல் கொண்டாட்டத்துக்கு வங்க நரியைக் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்காகத்தானே வங்க நரியை வைத்திருக்கிறீர்கள். அதை அப்படியே பொங்கல் அன்று எடுத்து வந்து எங்களுக்குக் காட்டுங்கள்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர் இளம்பகவத், “வனத்துறை சட்டப்படி வன உயிரினங்களை துன்புறுத்தக் கூடாது. வங்க நரியை நீங்கள் பாதுகாத்திருந்தால், மயில்களின் இனப்பெருக்கத்தை வங்க நரிகள் கட்டுப்படுத்தியிருக்கும். அதனால்தான் உயிரியல் பூங்காவில் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள்” என்றார்.
இதைக் கேட்ட விவசாயி, “வனத்தை ஒட்டிய பகுதிகளில் விளைபயிர்களைக் காப்பாற்ற மருந்து வைத்ததால் வங்க நரிகளெல்லாம் ஓடிவிட்டன. வங்க நரியைப் பார்க்கவில்லை என்றால் எங்களால் பொங்கல் கொண்டாட முடியாது. இல்லையென்றால், நரியை வளர்க்க அனுமதி கொடுங்கள். இந்த ஆண்டு நாங்கள் பொங்கல் கொண்டாட நடவடிக்கை எடுங்கள்” என்றார். அவரது பேச்சால் கூட்ட அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. சேலம் புத்தகத் திருவிழா வரும் 27-ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
வங்கநரி ஜல்லிக்கட்டு: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஆண்டுதோறும் தைப் பொங்கலுக்கு மறுநாள் வங்கநரி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதற்காக, கிராமத்து இளைஞர்கள் வனப்பகுதிக்குள் சென்று, குள்ளநரியின் சிறிய வகையான வங்க நரியைப் பிடித்து வந்து, கிராமக் கோயிலில் வழிபாடு நடத்துவர். நரிக்கும் சிறப்புப் பூஜை செய்வர்.
பின்னர், நரியைக் கயிற்றால் கட்டிப் பிடித்துக்கொண்டு கோயிலைச் சுற்றி வரச் செய்வர். வழிபாடு முடிந்ததும் வங்க நரியை மீண்டும் காட்டுக்குள் விட்டு
விடுவர். இந்த வழிபாட்டால் கிராமத்தில் நோய், நொடி அண்டாது, வேளாண்மை செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. வனத்துறையின் நடவடிக்கையால் கடந்த சில ஆண்டுகளாக வங்கநரி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.