மறியலில் ஈடுபட்ட மக்கள் | உள்படம்: உயிரிழந்த ஆனந்தன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து சடலத்துடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சிகரமானப்பள்ளி, தோட்டகனவாய், கே.கொத்தூர், கீழ் பூங்குருத்தி, மேல் பூங்குருத்தி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.
இந்த யானை பகலில் வனத்திலும், இரவில் வனத்தில் இருந்து வெளியேறி கிராம பகுதிகளில் உலா வருகிறது. அவ்வாறு வரும் ஒற்றை யானை, விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதங்களையும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழ் பூங்குருத்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்தன்(40). இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாகவும் உள்ளார். நேற்று ஆடிப்பெருக்கை ஓட்டி, கோயிலில் பூஜைகள் முடித்துவிட்டு, வீட்டுகு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஒற்றை யானை, ஆனந்தனை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் அவர் நிகழ்விடத்திலேயே படுகாயங்களுடன் உயிரிழந்தார்.
இதே போல் கறவை மாடு ஒன்றையும் யானை தாக்கி கொன்றது. இதில், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் ஆனந்தன் சடலத்துடன், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி வனத்துறையினர், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் மகாராஜாகடை போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக யானைகளால் விவசாயிகள், கிராம மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒற்றை யானை தாக்கியதில் இதுவரை 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுக்கு பாதுகாப்பு வேண்டும். யானை தாக்கி உயிரிழந்த ஆனந்தன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும்.
ஒற்றை யானையை வனப்பகுதிக்கு விரட்டி மின்வேலி அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். வனத்துறையினர் இரவு நேரங்களில் யானைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், என்றனர்.
அப்போது யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்று மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீஸார், ஆனந்தனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக, கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.