சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.14.50 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு 14.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நெமந்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செங்கேணி, கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வயலுக்கு சென்றுவிட்டு, கெங்கையம்மன் கோயில் குளக்கரை வழியாக வீடு திரும்பியபோது, வீசிய பலத்த காற்றில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருக்கு இடைக்கால நிவாரணமாக தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,14 லட்சத்து 54 ஆயிரத்து 880 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து செங்கேணியின் மனைவி தனலட்சுமி, மகன்கள் மணிகண்டன், சத்யா ஆகியோர் தங்களது மனுவை பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என சென்ன உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக நிர்ணயித்து உத்தரவிட்டார். ஏற்கெனவே 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 9 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாயை, 2021-ஆம் ஆண்டு முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

SCROLL FOR NEXT