சென்னை: மேற்கு வங்கம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவல் துறை மரியாதையுடன் நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் கவுரவிப்பு, இந்திய விடுதலைக்காகப் போராடிய தமிழக வீரர்களைப் பெருமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், இந்திய ஒருமைப்பாடு, தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை முன்வைத்தும் ஆளுநர் பேசினார்.
அதேநேரம் தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்தன. இதனால், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நிறுத்திவைப்பு, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை புறக்கணிப்பு, சட்ட மசோதாக்கள் நிறுத்தம் என பல்வேறு விவகாரங்களில், இருதரப்புக்கும் இடையே மோதல்கள் உருவாகின. இந்தச் சூழலில்மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநராக கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார்.
இந்நிலையில் ராஜ்பவனில் இருந்து ஆளுநர் ரவி நேற்று காலை தனது குடும்பத்துடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவரை வழியனுப்பும் நிகழ்வில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) மதியம் 12.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.