ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதபடி வரும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள். படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலை 5 நாட்கள் போராட்டத்துக்கு பின்னர், அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
ஏலக்காய் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அந்த வாகனத்தின் ஓட்டுநரான தேனி மாவட்டம் டி.அழகர் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (42) காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவர், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் முத்து, காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அன்றைய தினம் இரவு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரின் உடலில் 5 இடங்களில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வந்த அவரது உறவினர்கள், 5-வது நாளான நேற்று, அவரின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது, அவரின் உடலைப் பார்த்து கதறி அழுத அவரது மனைவி சுதா, நான் எனது கணவரோடு காவல் நிலையத்துக்குச் சென்றிருந்தால், இப்படி நடந்திருக்காதே, எனவும் எனது கணவருக்கு நிகழ்ந்த மரணம் போல, இனி யாருக்கும் நடக்கக் கூடாது.
‘ஐயா முதல்வரே..! எல்லாருக்கும் நல்லது பண்றீங்கன்னு சொல்றீங்களே; தந்தையை இழந்து தனியா தவித்து நிற்கும் எனது மகளின் தவிப்பை கேட்க மாட்டீர்களா’ எனக் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.