கைதான முகமது ரபீக்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் போலி மருத்துவரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர். போலி மருத்துவர் நடத்திய மருத்துவமனைக்கு அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம், ஜிந்தா தெருவில், ’நேச்சுரல் ஹெல்த் கேர் சென்டர்’ என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் மருத்துவம் படிக்காத நபர் சிகிச்சை அளித்து வந்ததாக, பொதுமக்கள் தரப்பில் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் நேற்று முன் தினம், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது ரபீக்(35) என்பவர், எலெக்ட்ரோ ஹோமியோபதி மட்டுமே படித்துவிட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள், முகமது ரபீக் நடத்தி வந்த மருத்துவமனையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து, முகமது ரபீக் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் சுஜி கிருத்திகா அளித்த புகாரின் பேரில், போலி மருத்துவரான முகமது ரபீக்கை போலீஸார் கைது செய்தனர்.