மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையை ஆய்வு செய்த டிஜஜி சத்திய சுந்தரம். | படங்கள் எம்.சாம்ராஜ் |

 
தமிழகம்

புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்த ஆலைக்கு சீல்!

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரபல நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மருந்துகள் தயார் செய்த தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த 4 குடோன்களில் இருந்த பல கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் போலி மருந்து தொடர்பாக ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் புதுச்சேரியில் இருந்து போலி மருந்து தயாரித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் தொழிற்சாலை வளாகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சோதனையில், உரிமமின்றி ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மருந்து விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சிபிசிஐடி போலீஸாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அடுத்த படம்: பறிமுதல் செய்யப்பட்ட போலி மாத்திரிகைகள்.

அதில் இந்த மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது சீர்காழியைச் சேர்ந்த ரானா, காரைக்குடியைச் சேர்ந்த மெய்யப்பன் என தெரியவந்தது. இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்த அங்கு சோதனை நடத்த போலீஸார் நேற்று மாலை சென்றனர். அப்போது தொழிற்சாலையின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால் போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரபல நிறுவனத்தின் பேரில் மருந்துகள், அதனை தயாரிக்கும் இயந்திரங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி போலீஸ் டிஐஜி சத்திய சுந்தரம் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தொழிற்சாலைக்கு வந்த டிஐஜி, போலி மருந்து தொழிற்சாலை மற்றும் அதன் குடோன்களை சோதனையிட்டு போலி மருந்துகளை பறிமுதல் செய்து, அதனை மருத்துவ அதிகாரிகளிடம் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மொத்தம் 4 குடோன்களில் இருந்து மருந்துகள் நேற்று இரவு வரை பறிமுதல் செய்யப்பட்டன. தொழிற்சாலை, குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து தொடர்ந்து அனைத்து மருந்துகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அதனை ஆய்வுக்காக மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி கூறுகையில், "ஆய்வுக்கு மாத்திரைகள் எடுத்துள்ளோம். அதன்பிறகே இது காலாவதியா, போலியா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும்" என்றார்.

இந்த ஆய்வில் எஸ்பிக்கள் ரகுநாயகம், சுருதி , சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்டுள்ள போலி மருந்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

முழு ஆய்வு மற்றும் விசாரணை முடிந்த பிறகே அதன் முழு மதிப்பு தெரியவரும். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராஜா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் விவரங்கள் அனைத்தும் புதுச்சேரி சுகாதாரத்துறை செயலருக்கு தெரிவிக்கப்பட உள்ளது" என்றனர். மேலும் போலி மருந்துகள் புதுச்சேரியிலிருந்து நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதும் தெரிகிறது.

SCROLL FOR NEXT