சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் சொத்துப் பதிவு செய்யும் பொது மக்களுக்கு, அதன் ஆவணங்களின் அச்சுப் பிரதிகளை நேரடியாக வீடுகளுக்கே தபாலில் அனுப்பும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை:
வருகை இல்லா ஆவணப்பதிவு திட்டம் கடந்த ஆக.17-ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல்முறையாக சொத்து வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்லாமலேயே பதிவு செய்யலாம்.
அடையாளச் சரிபார்ப்பு, ரேகைப் பதிவு உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் நடைபெறும். பதிவு செய்த ஆவணங்கள் மின்னணு முறையில் அனுப்பப்பட்டாலும், அச்சுப் பிரதியையும் வழங்க புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிறப்புத்தாள்கள் பயன்படுத்தி, க்யூஆர் குறியீடு வசதியுடன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஒரே இடத்தில் அச்சிடப்படும். இந்த அச்சகத்தை அமைத்து 5 ஆண்டுகள் நடத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்படும்.
இந்த அச்சகத்துக்கான இடத்தைப் பதிவுத்துறை வாடகையின்றி வழங்கும். அச்சகத்தை நடத்தும் நிறுவனத்துக்கும், அங்கு பணிபுரிபவர்களுக்கும் பின்னணி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அச்சிடப்பட்ட ஆவணங்கள் இந்திய அஞ்சல் துறை மூலம் சொத்து வாங்கியவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்பப்படும். சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்குள் ஆவணங்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர மாவட்டங்களுக்கு அதற்கேற்ப கால அளவு நிர்ணயிக்கப்படும்.
பாதுகாப்புத்தாள் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். அச்சிடுதல் மற்றும் அஞ்சல் செலவுகள் பதிவுக் கட்டணத்தில் ஈடுசெய்யப்படும். ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் ஆவணம் ஒன்றுக்கான கட்டணத்தை பதிவுத்துறை ஏற்கும்.