தமிழகம்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதி ஏற்படுத்த நடவடிக்கை: தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, சாய்தள வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச் சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, முழுமையான விவரங்களுடன் மனுவாக தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மனுதாரர் தரப்பில், வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்தள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள், வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகும் வகையில் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT