தமிழகம்

“பாஜக மூலம் ஆர்எஸ்எஸ் செல்வாக்கின் நிலை...” - காங். தேசிய நிர்வாகி கேப்டன் பிரவீன் தாவர் கருத்து

அ.முன்னடியான்

புதுச்சேரி: “அரசியல் வாகனமான பாஜக மூலம் ஆர்எஸ்எஸ் தனது நூறு ஆண்டு கால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியப் பொது வாழ்வில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது” என்று காங்கிரஸ் தேசிய நிர்வாகி கேப்டன் பிரவீன் தாவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில சித்தாந்த துறையின் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில சித்தாந்த துறை தலைவர் பிரதீஷ் இருதயராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சித்தாந்தத் துறையின் அகில இந்தியத் தலைவர் கேப்டன் பிரவீன் தாவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சித்தாந்தத் துறையின் அகில இந்தியத் தலைவர் கேப்டன் பிரவீன் தாவர் காங்கிரஸ் சித்தாந்தம் குறித்த குறிப்பேட்டை வெளியிட, மாநில தலைவர் பிரதீஷ் இருதயராஜ் பெற்றுக் கொண்டார். இதில் கேப்டன் பிரவீன் தாவர் பேசியது:

“ஆர்எஸ்எஸ்ஸின் ஆரம்பகால உறுப்பினர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் மட்டுமே. ஆர்எஸ்எஸ் எப்போதும் தன்னை ஓர் அரசியல் அமைப்பாக அல்லாமல், அரசியல் விளைவுகளை தீவிரமாக வடிவமைக்கும் ஒரு கலாச்சார நடைமுறையாகவே முன்வைத்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் இருந்து விலகியே இருந்தது.

தேசத்துக்கு எதிரான இயக்கம் ஆர்எஸ்எஸ். இந்த இயக்கம் காந்தி சுடப்பட்ட பின்னர் உட்பட 3 முறை தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு பல ஆண்டுகளுக்கு ஆர்எஸ்எஸ் தனது தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றவில்லை. அரசியலமைப்புக்கு பதிலாக மனுஸ்மிருதியை கொண்டுவர முயன்றது.

ஆயினும், இன்று தனது அரசியல் வாகனமான பாஜக மூலம் ஆர்எஸ்எஸ் தனது நூறு ஆண்டு கால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியப் பொது வாழ்வில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய கட்சி. அதன் தலைவர்கள் தேசத்துக்காக தியாகம் செய்தனர். அவர்கள் ஆட்சியில்தான் நாட்டில் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் மனதில் கொள்ள வேண்டும். மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்” என்று அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT