கோப்புப் படம்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலின்போது புகாருக்குள்ளான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 4-ம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறையின்போது வேட்பாளர்களும், தேர்தல் முகவர்களும் இருந்தனர்.
வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர், வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில், கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பின்கீழ், வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளிலிருந்து அவற்றின் சீட்டுகள் வெளியே எடுக்கப்பட்டு, சட்டப்படியான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையில் கருப்பு நிற உறைகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னர், வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டுள்ளன.
தேர்தல் புகார் மனுக்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றம் இறுதி செய்யும் வரை, இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறையின்படி, காப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தல் புகார் மனு குறித்த நேர்வில், தேர்தல் புகார் மனு இறுதியாக தீர்வுசெய்யப்படும் வரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.