வால்பாறை திமுக எம்எல்ஏ சுதாகர்

 
தமிழகம்

வால்பாறை திமுக எம்எல்ஏ கிறிஸ்துவர் என்பதற்கான ஆதாரம் தாக்கல்: விசாரணை டிச.18-க்கு தள்ளிவைப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: வால்பாறை தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏ சுதாகர், கிறிஸ்துவர் என்பதற்கான ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விசாரணையை டிச.18-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை தனித்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர், கிறிஸ்துவர் என்பதை மறைத்து இந்து பட்டியலினத்தவர் எனக் கூறி போலியாகச் சாதி சான்றிதழ் அளித்து வெற்றி பெற்றுள்ளார்.

அதனால் தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெண்ணிலா, ‘கிறிஸ்துவரான திமுக எம்எல்ஏ சுதாகர், சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். அவரது தந்தையின் உடலும் அதே தேவாலய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை சிறுகுன்றா சிஎஸ்ஐ தேவாலயத்தில், சுதாகர் சந்தா செலுத்தி உறுப்பினராக உள்ளார்’ என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவற்றை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை டிச.18-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT