மதுரையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்.

 
தமிழகம்

“உயர் பதவி வகிக்கும் பெண்களும் பணியிட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்” - நீதிபதி விக்டோரியா கெளரி வேதனை

கி.மகாராஜன்

மதுரை: “தொழில் மற்றும் உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஆண்கள் சக பெண் ஊழியர்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும்” என உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழு சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இன்று நடைபெற்றது.

பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழுத் தலைவர் நீதிபதி விக்டோரியா கௌரி தலைமை வகித்தார். அவர் பேசியது: “தொழில் மற்றும் உயர் பதவிகளில் உள்ள பெண்கள்கூட பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கள்ளக்குறிச்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். இப்படியான சூழலில் விழிப்புணர்வ ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஆண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களை மதித்து கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். பதவி வேறுபாடின்றி அனைவரும், தொழில்முறை ஒழுக்கத்தையும், பரஸ்பர மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த நீதிபதி ஆர்.பூர்ணிமா பேசுகையில், “பெண்கள் துணிச்சல், மனவலிமை, விடாமுயற்சி மற்றும் சாதனையின் அடையாளங்கள். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவது ஓர் அமைப்பின் கடமை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படைக் கடமையாகும்” என்றார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து நீதிபதி அனிதா சுமந்த் பேசியது: “பெண்களை தெய்வமாக வழிபடும் நாம் அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்குரிய மரியாதை, கண்ணியத்தை வழங்கத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு பெண்ணும் ராணி லட்சுமிபாய் அல்லது வேலு நாச்சியாராக மாற வேண்டிய அவசியமில்லை. மாறாக, தங்களது தனித்துவமான அடையாளத்துடன் தன்னம்பிக்கையோடும், சுய மரியாதையோடும் வாழ வேண்டும்.

பணியிடங்களில் பாலின வேறுபாடின்றி ஒவ்வொருவரும் மற்றவர்களின் தனிப்பட்ட இடம், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்க வேண்டும். பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி யாருக்கும் பிரச்சினைகளை கொடுக்கக்கூடாது” என்றார்.

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசுகையில், “ஒருவர் சாதாரணமாக கருதிப் பேசும் வார்த்தைகள், நகைச்சுவை, சைகை அல்லது உடல் மொழிகூட மற்றொருவருக்கு மன உளைச்சலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தக் கூடும். பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள், இறுதியில் பணியிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளக்கூடும்.

ஆண்களும், பெண்களும் தங்கள் தனிப்பட்ட எல்லைகளை மதித்து கண்ணியத்தோடும், மனித நேயத்தோடும், பரஸ்பர மரியாதையோடும் நடந்துகொள்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் அமைதியான பணிச்சூழலை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு ஆணும் தனது தாய், சகோதரி அல்லது மனைவி பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் அவர்களை எவ்வாறு கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாரோ, அதே மரியாதையை தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்” என்றார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேசுகையில், “பெண்களை எவ்வாறு மதித்து நடத்த வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்பிக்க வேண்டும். அன்பு, பாசம் மற்றும் நம்பிக்கைக்கு பாலின வேறுபாடு கிடையாது. போர் மற்றும் மோதல் ஏற்படும் சூழல்களில் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவோராகவும், குறி வைக்கப்படுவோராகவும் உள்ளனர்” என்றார்.

நிறைவு நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பல்வேறு தலைப்புகளில் நான்கு அமர்வுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓய்வு டிஎஸ்பி சுனந்தாபாகவதி, வழக்கறிஞர் பி.பாபு, டாக்டர் சுகந்தா ராமமூர்த்தி, வழக்கறிஞர் கே.சாமிதுரை, ஓய்வு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கறிஞர் எஸ்.மகேஷ் பாபு ஆகியோர் பேசினர். கல்லூரி முதல்வர் பியூலாஜெயஸ்ரீ, உள்புகார் குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர் என்.இளங்கோ நன்றி கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT