தமிழகம்

“உதயநிதி இன்னும் திருந்தவில்லை” - சனாதனம் குறித்த பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

மோகன் கணபதி

சென்னை: ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை என்றும், அவரை மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும் என்றும் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்களைப் பிரிக்கும் சனாதனம், அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியுள்ளார்.

சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், திமுகவின் கொள்கை என்றால், அதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை?

தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து தர்மத்தை பழிப்பதை திமுக வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான், கடைசி நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என ஸ்டாலின் சொன்னதை மக்கள் நம்பவில்லை.

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி திமுகவுக்கு கிடைக்காது என பேசப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லை என்றால் திமுக என்பது ஜீரோதான்.

அதனால்தான், "நாங்கள் எப்போதும் இந்து விரோதிதான்" என்பதை, எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி பேசியுள்ளார். தமிழக மக்கள் இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனர். அப்படியும் இவர்கள் திருந்தவில்லை. அதனால் மக்கள் திருத்துவார்கள். அதற்கான காலம் விரைவில் வரும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT