சென்னை: “அதிமுகவை காட்டிக் கொடுத்த எட்டப்பர் ஓபிஎஸ்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் துரோகத்தின் அடையாளமாக இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடந்துள்ளது.ஜெயலலிதாவின் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தை, அவரை அழிக்க நினைத்தவர்களை வாழ வைக்க செலவழிப்பேன் என, கொஞ்சமும் கூச்சமின்றி தயாராகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும், தகுதியும் அவருக்கு இல்லை. தனது வாழ்நாளை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்க உழைத்து, திமுக சூழ்ச்சி, சூதுகளை முறியடித்து தன்னுயிரை மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அவருடன் தமிழக மக்களை ஏமாற்றும் ஸ்டாலினை ஒப்பிட்டு பன்னீர்செல்வம் பேசியது வேதனையின் உச்சம்.
தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளரை மாற்றி விடுவார்கள் என பச்சை பொய்யை கூறுகிறார் ஸ்டாலின். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதை போல ஸ்டாலினும், பன்னீர்செல்வமும் கவலைப்படுகின்றனர். அதிமுகவை ஒரு சாமானியர், ஜனநாயக அடையாளமாக பழனிசாமி வழி நடத்துகிறார்.
தேர்தல் பயத்தால் 22 கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளது திமுக. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்கள் கருணாநிதி, ஸ்டாலிடம் பயிற்சி பெறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை அபகரித்து கரையேற்றுகிறேன் என்பது திமுகவின் பலவீனம். தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்த ஸ்டாலின் இதுபோல ஆசை வார்த்தை கூறுகிறார் .
அதிமுகவில் காலாவதியான தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் திமுகவின் உண்மை தொண்டர்களுக்கு எதிர்காலம் இல்லை என, சூசகமாக அவர் கூறுகிறார். எங்களைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்கிறோம். அதிமுகவில் உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அசைக்க முடியாது. ஜெயலலிதாவை அழிக்க நினைத்தவர்களுக்கு செலவு செய்ய துணிந்த ஓ. பன்னீர்செல்வத்தை பாவம் சும்மா விடாது, தலைமுறைக்கும் தொடரும்.
துரோகத்தை முகமுடியாக கொண்டுள்ள அவர், விசுவாசத்தை பற்றி வேஷம் போடுவதை மக்களும், திமுகவின் தொண்டர்களுமே மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை உறிஞ்சி, ஜெயலலிதாவை அழிக்க நினைத்தவர்களிடம் அதிமுகவை காட்டி கொடுத்த எட்டப்பர் ஓபிஎஸ். அவர் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ஞான சூனியமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.