தமிழகம்

“நான் கஷ்டத்தை உணர்ந்தவன்; ஸ்டாலின் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்” - இபிஎஸ் பேச்சு

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: “கஷ்டம் என்றால் என்ன என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தவன். ஸ்டாலின் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்” என திண்டுக்கல்லில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் மற்றும் தமாகா சார்பில் போட்டியிடும் விடியல் சேகர் ஆகிய ஏழு வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

          

அப்போது அவர் பேசியதாவது: “திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். அதிமுகவை எதிர்க்க தில், திராணி, தெம்பு இல்லை. இருந்தால் எங்கள் நிர்வாகத்தை பற்றி பேசுங்கள் அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் போட்டி, எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அடிமை என பேசுகிறார்.

திமுக ஆட்சியை அகற்ற நடக்கும் தேர்தல் இது. இவருக்கு அடிக்கடி மறதி உண்டு. இதனால் தான் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் போட்டி என்கிறார். கடலூர் வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் சின்னம் தெரியாமல் என்ன சின்னம் என்று கேட்டு பேசுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னம் கூட மறந்துவிட்டது. நடைபெறவிருப்பது சட்டமன்ற தேர்தல். இதுபற்றி பேசினால் நான் பதில் சொல்கிறேன். நாட்டில் பிரச்சனைகளை விட்டுவிட்டு அவர் கிரிக்கெட் பற்றி பேசுகிறார்.

யார் எக்கேடு கேட்டால் என்ன கவலையில்லாத முதலமைச்சர் ஸ்டாலின். நாட்டில் உள்ள பிரச்சனைகள் முதல்வருக்கு தெரியாது. கஷ்டம் என்றால் என்ன என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தவன். அவர் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர். மக்களவை தொகுதி மறுவரையில் வாய்மூடி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார் ஸ்டாலின். மத்திய அமைச்சரே சொல்லிவிட்டார். மறுவரையில் எந்தவிதத்திலும் தமிழகம் பாதிக்காது என்று. இதற்கு மேலும் பேசினால் என்னவென்று சொல்வது. ஸ்டாலினுக்கு தோல்விபயம் வந்துவிட்டது. அதனால் எதைஎதோ பேசுகிறார்.

காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தான் மும்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கூட கூட்டணியில் உள்ள திமுக மும்மொழிக்கொள்கை பற்றி நம்மிடம் பேசுகிறார். ஸ்டாலின் குடும்பம் சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் நடத்துகிறது. பேசுவது ஒன்று செயல்படுவது ஒன்று. இரட்டைவேடம் போடும் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த காலத்தில் ஏமாற்றினீர்கள். தற்போது ஏமாற்ற முடியாது. பொங்கல் தொகுப்பு கொடுத்ததில் அரிசியில் வண்டு, புளியில் பள்ளி, ஒழுகும் வெள்ளத்தை கொடுத்தார்கள்.

கூப்பன் கொடுத்தால் தான் ஊழல் செய்யமுடியும். அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நேரடியாக ரூ.10 ஆயிரம் தருகிறோம். அவர்கள் கூப்பனில் கமிஷன் கிடைக்கும் என கொடுக்கின்றனர். திமுக குடும்பத்திற்கு என்ன வருமானம் வரும் என திட்டமிட்டு தான் தேர்தல் அறிக்கை விடுகின்றனர். குடும்பத்திற்காக இருக்கிற கட்சி திமுக. மக்களுக்காக இருக்கிற கட்சி அதிமுக. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.5 கோடி வரி ஏய்ப்பு ஊழல். அதிமுக ஆட்சியில் அத்தனை போராட்டதிற்கும் அனுமதி கொடுத்தேன். இந்த ஆட்சியில் ஒரு போராட்டதிற்கு கூட அனுமதி கொடுப்பதில்லை. அவர்கள் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளுக்குக் கூட கொடுக்கவில்லை.

கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. பாலியல் வன்கொடுமை நடக்கவும் கஞ்சா போதை ஆசாமிகள் தான் காரணம். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறார் என முதல்வர் பேசுகிறார். திமுக பாஜக கூட்டணி வைத்திருந்தபோது திமுக பாஜக ஆட்சி அமைந்தது. உதயநிதி அவர்களே உங்க தாத்தா கூட்டணி வச்சா சரி. நாங்க வச்சா மதவாத கட்சியா. சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஸ்டாலின் வாக்குகளை பெற நடிக்கும் நாடகம்.

நாம் சொல்வதற்கு முன்பே மோடியை நல்லவர் என்று சொன்னவர் கருணாநிதி. குஜராத்தில் சிறப்பாக ஆட்சி செய்தவர் என்றார். அவர்கள் சொன்னால் சரி, நாம் சொன்னால் தவறா. கருணாநிதியே சொல்லிவிட்டார் நரேந்திர மோடி நல்லவர் என. இவர்கள் நம்மைப்பற்றி பேச யோக்கியதை இல்லை. திமுக எப்போது பார்த்தாலும் நீட் என்கிறார்கள். நீட் கொண்டுவந்தது காங்கிரசும், திமுகவும் தான். கொண்டுவந்ததும் அவர்கள் தான், எதிர்ப்பதும் அவர்கள் தான். இரட்டைவேடம் போடுகின்றனர். நீட் விலக்கு பெற ரகசியம் இருப்பதாக சொன்ன உதயநிதி இதுவரை அதை சொல்லவில்லை.

மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமாக பேசி வாக்குகள் வாங்கிவிட்டு இப்பொழுது நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்கிறார் முதல்வர். கரோனா காலத்தில் ஒருவருவாயும் இல்லாமல் ஒரு வருடம் ஆட்சி செய்தது அதிமுக அரசு. திறமையான நிர்வாகம் செய்தது அதிமுக. தற்போது வரிவருவாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. வருவாய் அதிகரித்து மக்களின் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். வருவாய் அதிகரித்துள்ளது திட்டங்கள் இல்லை. அரசின் வருவாய் எங்கே சென்றது?

இஸ்லாமிய மக்கள் சிந்திக்கவேண்டும். கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணிவைக்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் சொல்வதெல்லாம் கேட்போம் என திமுக அவதூறு பரப்புகின்றனர். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தரும் கட்சி அதிமுக” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT