கோப்புப் படம்
வேலூர்: “தவெக அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நிலைக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று வேலூர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “சினிமாவில் எப்படி நடக்கிறதோ, அது போன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கிறது. உண்மையான சட்டப்பேரவை நடக்கவில்லை. பொதுமக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. சட்டப்பேரவையின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த "அம்மா உணவகம்" திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த அரசும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்துவோம் என்று சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். பல அமைச்சர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு துறைகள் இருக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் , கேள்வி எழுப்பும் போது துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் இவர்கள் தான் அதிகமாக பதில் சொல்கிறார்கள்.
மானியக் கோரிக்கையை வேறொரு அமைச்சர் தான் தாக்கல் செய்கிறார். பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டம் எதுவும் தமிழக வெற்றிக் கழக அரசு அறிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குறிப்பாக பெரிய வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை.
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற 100 நாட்களில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். இதில் செலவு மட்டும் 25 ஆயிரம் கோடி. இன்னமும் 1 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். இந்த தமிழக வெற்றி கழக அரசு ஐந்து ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நிலைத்தால் 10 லட்சம் கோடி கடன் 20 லட்சம் கோடி கடனாக மாறிவிடும்.
இன்றைக்கு பருப்பு, அரிசி மற்றும் சர்க்கரை விலைவாசி உயர்ந்துவிட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டம் என்பது அவர்கள் பதவியில் இருக்கும் போது தான் காரை பயன்படுத்த முடியும். பதவி முடிந்த பின்பு காரை திருப்பிக் கொடுக்க வேண்டும். திமுக அரசு ஆட்சியில் இருக்கும் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக நான் இருந்தேன். நான் சட்டப்பேரவையில், பேசுவதை காட்ட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்க வந்த தொண்டர் உயிரிழப்பு: வேலூர் தனியார் ஹோட்டலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் குவிந்திருந்தனர். அப்போது, அரப்பாக்கம் அதிமுக வட்டசெயலர் காமராஜ் (48) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டது. வேலுார் வடக்கு போலீசார் விசாரித்து வருக்கின்றனர்.
பழனிசாமியை வரவேற்க ஏராளமான கார்களில் கட்சியினர் வந்திருந்தனர். ஆனால், உயிருக்கு போராடியவரை கட்சியினர் காப்பாற்றவில்லை. உயிரிழப்புக்கு பழனிசாமி தான் காரணம் என காமராஜின் உறவினர்கள் குற்றம்சாட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.