இந்தத் தேர்தலோடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் குடும்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகள் திமுக அரசு கொடுமையான ஆட்சியை கொடுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலைத்தான் மக்கள் பார்த்தார்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஸ்டாலினை எம்எல்ஏ.வாக்கி, அமைச்சராக்கி, துணை முதல்வராக்கி, திமுகவுக்கு செயல் தலைவராக்கினார். அவருக்குப் பின் ஸ்டாலின் திமுக தலைவராகி விட்டார். கருணாநிதி போலவே, கட்சியிலும், ஆட்சியிலும் தனக்குப் பின்னால், அதுவும் ஆண் வாரிசுகள் திமுக கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உதயநிதியை அறிமுகம் செய்து,துணை முதல்வராக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இவர் திமுகவின் தலைவர், உதயநிதி இளைஞரணி மாநிலச் செயலாளர், கனிமொழி துணைப்பொதுச்செயலாளர். இப்படி குடும்பத்தில் இருப்பவர்கள் தான் அதிகாரத்திலும் ஆட்சியிலும், கட்சியிலும் உயர்ந்த பதவியில் இருக்க முடியும். திமுகவில் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்தாலும், தொண்டர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. ஆனால் அதிமுக அப்படி இல்லை. நான் முதன் முதலாக தேர்தல் பிரச்சார பயணத்தை மயிலாப்பூரில் தொடங்கினேன்.
அந்த கூட்டத்தில் நான் பேசியதற்கு அடுத்த நாள் 3 அமைச்சர்கள் பதில் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்து விட்டது. மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார். அவர்களுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் தான் என்ன பேசுறோம் என தெரியாமல் பேசுகிறார்கள் திமுகவினர். இந்த தேர்தலோடு கருணாநிதி குடும்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இனி தமிழகத்தை ஆளக்கூடியவர்கள் சாதாரண குடிமகன் தான். 10 ஆண்டுகள் அங்கம் வகித்த கட்சிகளுக்கு அற்புதமான பரிசு கொடுத்துவிட்டார் ஸ்டாலின். இருக்கும் வரை அட்டை போன்று அவர்களின் சத்துகளை உறிஞ்சிவிடுவார்கள். இனியாவது அவர்கள் சிந்தித்து சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.
அதிமுக சார்பில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து பழனிசாமி, திருவொற்றியூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.