தமிழகம்

“எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடியில் சிலை எதற்கு?” - திமுகவுக்கு பழனிசாமி கேள்வி

செய்திப்பிரிவு

எழுதாத பேனாவுக்கு கடலில் ரூ. 82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: அந்தியூர் விவசாயப் பகுதி. விவசாயத்துக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் அதிமுக என்றும் துணை நிற்கும்.

அதனால் தான் 2016-2021-ல் அதிமுக ஆட்சியின்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்பட்டது. நீர்நிலைகளை தூர்வாரி, ஏரி மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

          

தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள தேர்தல், யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். 2011-ல் வறட்சிக்காலத்திலும், நிதி நெருக்கடியிலும் மக்களை அதிமுக அரசு பாதுகாத்தது. டெல்டா மாவட்டங்களை புயல் புரட்டிப் போட்டபோது, நிவாரணம் வழங்கி விவசாயிகளை அதிமுக அரசு காத்தது.

இந்தியாவிலேயே கரோனா பரவலை வேகமாக தடுத்தது அதிமுக அரசுதான். தற்போது, ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் இருந்தபோதும், ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை இந்த அரசு மக்கள் மீது சுமத்தி உள்ளது. இதை மக்கள் மீது வரியாக திணிப்பார்கள்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மத்திய அரசு எங்களுடன்தான் உள்ளது. தேவையான நிதியை கேட்டுப் பெறுவோம்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,தைப்பொங்கலுக்கு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1,000, தீபாவளி பண்டிகையின்போது பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சியின்போது, அனைத்து அரசுத் துறைகளிலும் தேசிய விருது கிடைத்தது.

இப்போதைய திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எழுதாத பேனாவுக்கு கடலில் ரூ.82 கோடிக்கு சிலை வைக்க முயற்சித்து வருகின்றனர். எழுதாத பேனாவுக்கு எதற்கு சிலை? அதேபோல, கார் பந்தயத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். இதுபோல மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது. ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

மக்களின் கனவு, திமுக அரசை அகற்றுவதுதான். அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்தியூர் தொகுதிக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், கே.சி.கருப்பணன், பண்ணாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT