இபிஎஸ்
சென்னை: தமிழகத்தில் 125 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களை அரசுக்கு ஆதரவாக திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் மாவட்ட திட்ட அலுவலர்கள்ஆணையின்படி, மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும், ‘ஊராட்சி செயலாளர்கள்’ மற்றும் ‘125 நாள் வேலை உறுதித் திட்டத்தில்’ பணிபுரியும் ‘பணித்தளப் பொறுப்பாளர்கள்’ மற்றும் ‘பணியாளர்கள்’ வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானதாகும்.
மாவட்ட ஆட்சியர்கள், திமுக அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்கள், 125 நாள் வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டஅதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.
கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக பணிபுரியும் கிராம செயலாளர்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் 125 நாள் வேலைஉறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, திமுக அரசு தங்களது சுய லாபத்துக்காக, தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.