சேலம்: அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து தவெகவுடன் இணைத்த தவெக தலைவர் தான் களவாணி என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
ஓமலூரில் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினையை அறிந்து தீர்த்து வருகிறோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக அரசு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தனி தீர்மானம் கொண்டு வந்தது. இதில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது தேவையற்றது.
அதிமுக-வும் திமுக-வும் கூட்டு களவாணிகள் என்று விஜய் பேசியுள்ளார். அதிமுக-வில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவுடன் இணைத்துக் கொண்ட விஜய்தான் களவாணி. விஜய் பஞ்ச் டயலாக் மட்டுமே பேசுகிறார். ஆக்கப்பூர்வமான கருத்துகளை அவர் பேச வேண்டும். திராவிட கட்சிகள் சரியில்லை என்று கூறியவர், அதிமுக-வில் வெற்றி பெற்றவர்களை தன் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.காங்கிரஸ் கட்சி சுய லாபத்துக்காக திமுக தலைமையில் வெற்றி பெற்று, மாற்று அணிக்கு சென்று பதவி பெற்றுள்ளனர். இதில் என்ன கொள்கை உள்ளது. ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.