தஞ்சாவூரில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், டிடிவி.தினகரன்.படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர்: மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று தெரிவித்த கர்நாடக துணை முதல்வருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியது: பொன்விளையும் பூமியான டெல்டாவில் உள்ள நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்க மீத்தேன் திட்டத்துக்கு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது ஒப்பந்தம் வழங்கினார். ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, நிலங்கள் பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 50 ஆண்டு கால காவிரி நீர் பிரச்சினைக்கும் உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்தோம்.
விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் தான் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர் வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிமுக ஆட்சி வந்ததும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக சொல்கிறார் ஸ்டாலின். நீங்கள் 15 ஆண்டு காலம் மத்திய அரசில் பங்கு வகித்தீர்கள்.
தமிழகத்துக்கு எவ்வளவு நிதி கொண்டு வந்தீர்கள், குடும்பத்தில் இருப்பவர்கள் இடம்பெறவேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது கூட நிதி பெற்றுக் கொடுக்கவில்லை. இப்போது திட்டமிட்டு பாஜகவை விமர்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் வைக்கப் பட்ட கோரிக்கைகைளை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால், இப்போது இணக்கமான சூழல் இல்லை. எப்போது பார்த்தாலும் பாஜகவை விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும், அதிமுக ஆட்சியில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டதும் உடனுக்குடன் நிவாரணம் கொடுத்தோம்.
2 முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். நடந்தாய் வாழி காவிரி என்ற அற்புதமான திட்டத்தை மோடியிடம் அறிக்கையாகக் கொடுத்து, அதற்குத் தேவையான நிதியை கேட்டேன். உடனடியாக அடுத்த ஆண்டே குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறச் செய்து, தமிழகத்தில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.11,600 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடலில் கலக்கும் வரை சுத்தமாக இருக்கும். இப்படி ஒரு திட்டமாவது இவர்கள் பெற்றார்களா, குறை சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டனர். மேகேதாட்டுவில் அணை கட்டப்போவதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்கிறார். தற்போது அவரை அழைத்துவந்து, அவருடன் சேர்ந்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின். இது எவ்வளவு பெரிய துரோகம். எனவே, நமக்கு துரோகம் செய்பவருடன் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஸ்டாலினை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் 1,200 நாட்களாகத் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. இதற்கு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடன் இருந்தார்.