நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவருவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் தோல்வி பயம் காரணமாக நாடாளுமன்றம் கூட்டப்படுவதை ஸ்டாலின் எதிர்க்கிறார் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தை முடித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அன்று இரவு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். நேற்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். தேர்தல் பணிகள், பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாலையில் தேனி, மதுரை மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக, பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு செய்வதற்காக 3 தினங்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வேண்டுமென்றே கூட்டப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் அவர் கூறியுள்ளது.
பாராளுமன்றத்தை கூட்டுவது மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள். 5 மாநிலங்களில்தான் தேர்தல் நடக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் இல்லை. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை நிறைவேற்ற இப்பொழுது அருமையான தருணம். அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு பெண்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஒன்று. இன்று அது நிறைவேறும் சூழ்நிலை. அதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், தேர்தலில் பெண்கள் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்து விடுமோ என்று ஸ்டாலின் பயப்படுகிறார். அதனால் அவரது கருத்தை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அரசு பெண்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாகவே நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளது. தேர்தல் தோல்வி பயம் காரணமாக பெண்கள் இடஒதுக்கீட்டுக்காக நாடாளுமன்றம் கூட்டப்படுவதை ஸ்டாலின் எதிர்க்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.