தமிழகம்

“அதிமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் மீது விசாரணை...” - பழனிசாமி உறுதி

வேட்டையன்

ஆரணி: “அதிமுக ஆட்சி அமைந்ததும், கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் சட்டரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து, மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (ஏப்.4) ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேவூர் பகுதியில் குழுமியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: “முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் கோபத்தைக் கக்குகிறார். எரிச்சலை வெளிப்படுத்துகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக இபிஎஸ் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதாக அவர் சொல்கிறார்.

          

நான் பேசியதை நன்கு கேளுங்கள். உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். உங்கள் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவிடம் காட்டுங்கள். அவர்தான் ஆடியோவில் ஒரு செய்தி சொன்னார். அது இந்திய அளவில் வைரலாகிறது. அதைத்தான் நான் சொன்னேன். என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? ஆ.ராசா மீது கோபப்பட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார் என்பதால் பயம்.

ஆ.ராசா சொன்னதை தான் நான் சொன்னேன். அப்பாவை சிறையில் அடைப்பது நியாயமா? உங்களை ஆளாக்கி இந்தியாவே உங்களை பாராட்டுகின்ற அளவுக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர், செயல் தலைவர் ஆக்கினாரே. அதற்காக உங்கள் தந்தையை வீட்டுச் சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொல்கிறார். அழகிரியும் இதையேதான் சொல்றார்.

ஆ.ராசா உண்மையைச் சொன்னால் இருக்கும் இடம் வேறாக மாறிவிடும். ஸ்டாலின் பேசப்பேச அது, உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அண்ணனை ஒதுக்கிவிட்டீர்கள், தங்கையை மாநில அரசியலுக்கு வராமல் தடுத்துவிட்டீர்கள். உங்க அப்பா கடைசி வரை உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் நீங்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆ.ராசா ஆடியோ செய்தியை விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இறந்தபோது என்னவெல்லாம் பேசுனீர்கள்?

2021 தேர்தலில் 22-வது வாக்குறுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவித்திருந்தீர்கள். இப்போது நான் சொல்கிறேன், கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அவரும் முன்னாள் முதல்வர்தானே. தந்தைக்கே இந்த கதி என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி என்று எண்ணிப்பாருங்கள்.

துரைமுருகன் 2021-ல் பிரசாரத்திற்கு போகும்போது, இதுதான் கடைசி தேர்தல் வயதாகிவிட்டது என்றார். நம் வேட்பாளர் ராமு 800 ஓட்டில் தான் தோல்வியடைந்தார். இப்போது இந்த முறை ஜெயித்தால் அதிக முறை எம்.எல்.ஏவாக இருந்த பெருமை கிடைக்கும் என்கிறார். உங்களுக்கு பெருமை கிடைப்பதற்கு மக்கள்தான் கிடைத்தார்களா?

துரைமுருகனுக்கு 88 வயதாகிவிட்டது. போட்டியிடுவது சொந்த விருப்பம். ஆனால், நடக்கவே முடியவில்லை. எப்படி மக்கள் குறை கேட்பார்? தொகுதி முழுவதும் அலைய வேண்டும். நான் தவறாகச் சொல்லவில்லை. அவரை மதிக்கக்கூடியவன், அதனால் சொல்கிறேன். காட்பாடியில் நம் வேட்பாளர் ராமுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

அதிமுக ஆட்சியில் இருந்து மீட்டு புதிய விடியலைத் தந்ததாக நெல்லையில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியாவிலேயே திமுக ஆட்சியில் 2021-26 வரை கடன் வாங்குவதில் முதல் மாநிலம், ஊழல் செய்வதில் முதல் மாநிலம், போதைப் பொருள், பெண்கள் பாலியல் துன்புறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொள்ளையடிக்கும் குடும்பம் ஆகிய எல்லாவற்றிலும் முதல் மாநிலம்.

நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துவிட்டார். போட்டோ ஷூட் நடத்தி, மக்களை ஏமாற்றுவதில் நம்பர் 1 கட்சி திமுக. இந்த ஆட்சியில் கடுகளவு கூட சாதனையில்லை, மலையளவு சோதனைதான் உள்ளது, இதுதான் மக்கள் படும் வேதனை.

இந்த மாவட்டத்தில் ஒரு தலைசிறந்த நெடுஞ்சாலைத்துறை விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார். ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டுவார்கள். இவர் கட்டிய பாலம் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது. அது, யாருடைய துறை?

எ.வ.வேலு அமைச்சராக உள்ள துறை. அவர் தென்பெண்ணை ஆற்றில் தரமில்லாத பாலம் கட்டினார். நிதி அதிகமாக இருப்பதால் பாலம் உயரத்தைக் குறைத்து கட்டினாராம், பெரிய எஞ்சினியராக இவரை நினைத்துக்கொண்டு 15 கோடியில் கட்டிய பாலம் தண்ணீரில் போய்விட்டது. இன்னும் 3 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டு உயரமாகக் கட்டியிருந்தல் போயிருக்காது. இதுபற்றி விசாரித்து அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் வரிப் பணத்தை வீணாக்கிவிட்டீர்கள். பொறியாளர் வைத்து முறையாகக் கட்டியிருக்க வேண்டும். நானே நேரடியாக வந்து கட்டிய தகன மேடை பக்கத்தில் இருக்கிறது. 5 லட்சத்தில் கட்டியது உறுதியாக இருக்கிறது. 15 கோடியில் கட்டிய பாலம் தண்ணீரில் போய்விட்டது.

என் மீது ஸ்டாலின் ஒரு களங்கம் சுமத்தியிருக்கிறார். கருணாநிதி அடக்கம் செய்ய மெரினாவில் என்னிடம் இடம் கேட்டார். இதே கருணாநிதி முதல்வராக இருந்தபோது எம்ஜிஆர் மனைவி இறந்தார், நாங்க அதிமுக சார்பில் இடம் கேட்டோம், அவரும் முதல்வராக இருந்தவர், எம்ஜிஆர் பக்கத்தில் அடக்கம் செய்யக் கேட்டோம், முதலமைச்சராக இருந்து இறந்தால்தான் இடம் கிடைக்கும், ராமாவரம் தோட்டத்தில் சொந்த இடம் இருக்கிறது, காவல் துறை மரியாதை செலுத்தப்படும் என்றீர்கள்.

அதற்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தவர், அவர் வேறு கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்தவர். கருணாநிதியிடம் அவரை புதைக்க மெரினாவில் இடம் கேட்டனர். முதல்வராக இருந்து இறந்தால்தான் மெரினாவில் இடம் கிடைக்கும், அதனால் கிண்டியில் இடம் கொடுக்கிறோம் என்றனர். அப்படி என்றால் கருணாநிதி யாரு? முன்னாள் முதல்வர்தானே? மற்ற முன்னாள் முதல்வர்களுக்கு ஒரு நியாயம், இவருக்கு ஒரு நியாயமா? அதனால்தான் கிண்டியில் 2 ஏக்கர் நிலம் கொடுத்தேன், அதை மறுத்து நீதிமன்றம் போனீர்கள். இந்த உண்மையை மறைக்க முடியாது. உங்கள் அப்பா என்ன முடிவு எடுத்தாரோ, அதே முடிவைத் தான் நானும் எடுத்தேன்.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலில் அதிமுகவில் அடையாளம் காட்டினோம். அமைச்சர்களில் பாதிப் பேர் அதிமுககாரர்கள். 8 பேர் அமைச்சர், 19 பேர் எம்.எல்.ஏ.வுக்கு நிற்கிறார்கள். வேலுவை பக்கத்தில் நிற்கவைத்து உதயநிதி ஓட்டு கேட்கிறார். இவர் எப்போது கட்சிக்கு வந்தார்? அவர் எப்போது கட்சிக்கு வந்தார்? அதிகாரத்துக்காக அடிமையாக இருக்கும் வேலுவே, உங்கள் தகுதி அவ்வளவுதான். திருவண்ணாமலை தொகுதியில் இவர் தான் வேட்பாளர் என்று உதயநிதி பிரசாரம் செய்கிறார். இதுதான் திமுக.

10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வருகிறது? ஏழைகள் டாஸ்மாக் போறாங்க, 10 ரூபாய் அதிகம். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

நகராட்சி துறையில் முறைகேடு நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து அறிக்கை அனுப்பியது. எஃப்.ஐ.ஆர் போடவில்லை. அதிமுக நீதிமன்றம் போய் தீர்ப்பு வந்து போடவில்லை. அதிமுக ஆட்சியில் முழுமையாக விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. எங்கே பார்த்தாலும் கஞ்சா. எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்வர் கவனத்துக்கு கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதை கொண்டுவந்தேன். பேட்டி கொடுத்தோம். ஒன்னுமே நடக்கலை. ஏனெனில் துணை நிற்பது திமுக நிர்வாகிகள். அதனால் காவல்துறை தடுக்க முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

திமுக வாரிசு அரசியல் குடும்ப ஆட்சி தேவையா? முடிவு கட்டுவீர்களா? நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் உதயநிதிக்கு தெரியவில்லை. சென்னையில் கார் பந்தயம் நடத்துகிறார், இது தேவையா? மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கிறார்கள்.

திமுக எம்.எல்.ஏ நடத்தும் மருத்துவமனையில் ஏழைகளின் கிட்னியை திருடுகிறார்கள். இதுபற்றி குழு போட்டு ஆய்வுசெய்து முறைகேடு உண்மை என்று கண்டுபிடித்தும் நடவடிக்கை எடுக்கலை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குமாரபாளையத்தில் ஒரு பெண்ணிடம் கிட்னிக்குப் பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். எப்படிப்பட்ட கொடுமை பாருங்கள். உறுப்பு திருடும் அரசு தேவையா? திமுகவினர் மருத்துவமனைக்குப் போயிடாதீங்க, போனவர்கள் ஸ்கேன் பண்ணி பாத்துக்கோங்க.

525 வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கேஸ் மானியம், கல்விக் கடன், பெட்ரோல், டீசல், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள், கூடுதல் சர்க்கரை என எதுவுமே செய்யவில்லை. அப்போதே நிறைவேற்றவில்லை, புதிதாக இப்போது அறிவித்திருக்கிறார். மக்கள் நம்புவார்களா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஏற்கெனவே நிறைவேற்றவிலை, தூய்மைப் பணியாளர், சத்துணவு அமைப்பாளர், அரசு ஊழியர் ஆகியோரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார். நீங்கள் எங்கே கொடுத்தீர்கள்? கொடுக்க வைத்தோம். அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார்.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா?” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT