சென்னை: ‘காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை தவெக அரசு பெற வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரையே நம்பி உள்ளனர்.
உச்ச நீதிமன்றமும் காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை.
கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டு தலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும்.
கர்நாடக அரசுடன் தமிழக முதல்வர் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களாக தமிழகத்துக்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோக மாகும்.
டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளது.
இத்தகைய சூழலில், இம்மாதம் 22-ம் தேதி (நாளை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் விஜய் உரிய அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.