தமிழகம்

விடியா ஆட்சி உங்கள் வீட்டு ‘பில்’லே சாட்சி: பிரச்சாரத்தை அறிவித்த பழனிசாமி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்த அதே கூட்டணி மீண்டும் அமைந்திருப்பது, கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக டிடிவி தினகரனும் இணைந்திருப்பது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பழனிசாமி புது உற்சாகத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் அதிமுக இந்த தேர்தலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்திலும் முந்திக்கொண்டு செயலாற்றி வருகிறது. எல்லா கட்சிகளுக்கும் முன்பாக, கடந்த ஜூலை மாதமே தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார்.

          

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் ‘விடியா ஆட்சி - உங்கள் வீட்டு ‘பில்’லே சாட்சி' என்ற பூத் வாரியாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை பழனிசாமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: "கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன்’’ என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணம், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.

அதை வீடுதோறும் கொண்டு சேர்க்க இருக்கிறோம். அதற்காக இன்று (ஜன.28) முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, திமுக ஆட்சிக்கு எதிராக, ‘விடியா ஆட்சி - உங்கள் வீட்டு ‘பில்’லே சாட்சி' என்ற தலைப்பில் பிரச்சாரத்தை அறிவித்திருக்கிறோம்.

இதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக ‘அஇஅதிமுக கனெக்ட்’ (AIADMK Connect) செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, எனது தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலம், தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலம் ஆகியவற்றை ஒப்பிட்டு, கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் பனிஷ்மென்ட் பில்-ஐ, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும் மேற்கொள்ளப்படும். நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளை விளக்கிச் சொல்லும் இந்தப் பிரச்சார திட்டத்துக்கான முன்னெடுப்பும், அதனைத் தொடர்ந்து களப் பணிகளும் நடைபெறும்.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் இப்பணியை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக நிர்வாகிகள் கருத்து: இப்பிரச்சாரம் நேற்றே தொடங்குவதாக பழனிசாமி அறிவித்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்றே கட்சியினர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில் இந்த பிரச்சாரத்துக்கான சுவடே இல்லாத நிலை இருந்தது. இது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "இந்த தேர்தலில் பழனிசாமியின் வேகத்துக்கு மாவட்ட செயலாளர்கள் இயங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது" என்றனர்.

SCROLL FOR NEXT