தமிழகம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 செல்லாத ஓட்டுகள் திமுகவில் போட்டி: பழனிசாமி கிண்டல்

செய்திப்பிரிவு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 பேர் திமுகவில் போட்டியிடுகின்றனர். இந்த செல்லாத ஓட்டுகளால் எந்த பயனும் இல்லை என்று, கடையநல்லூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கிண்டலாகப் பேசினார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு நேற்று பிரச்சாரம் செய்த பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். நாங்கள் உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.10 ஆயிரம் செலுத்துவோம்.

          

எல்லா குடும்பத்துக்கும் பிரிட்ஜ் வழங்குவோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவோம். பணிக்கு செல்லும் பெண்களுக்கு 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 காஸ் சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பொய் சொல்லி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்த தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும். திமுகவில் ஆட்களே இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 பேர் திமுகவில் போட்டியிடுகின்றனர். இந்த செல்லாத ஓட்டுகளால் எந்த பயனும் இல்லை.

அதிமுக சொந்தக்காலில் நிற்கிறது. மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால், கூட்டணியை நம்பி திமுக உள்ளது. தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடையேதான் போட்டி என்று ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறதா, டெல்லியில் நடக்கிறதா? பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். அவருக்கு சுயமாக சிந்திக்கும் திறனில்லை.

எங்களுக்கு எதிரி திமுகதான். மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவோம். இந்த தேர்தல் திமுகவுக்கு இறுதி தேர்தல். திமுக என்றால் கருணாநிதி குடும்பம் மட்டுமே. இந்த குடும்ப ஆட்சி நாட்டுக்கு தேவையா?. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த முறை திமுகவுக்கு மக்கள் நிச்சயமாக தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

கண்களை இமை காப்பதுபோல் சிறுபான்மையினரை பாதுகாத்தது அதிமுக அரசு. சிறுபான்மையின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக நிறைவேற்றியது. அப்துல் கலாமுக்கு வாக்களித்து குடியரசுத் தலைவராக்கியது அதிமுக. ஆனால், அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்: பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. தொண்டர்கள் வழி விட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பழனிசாமி கேட்டுக் கொண்டார். ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT