தமிழகம்

“காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை மீட்க நடவடிக்கை தேவை” - பழனிசாமி

தமிழினி

சென்னை: ஆந்திர மாநில காவல் துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 விசைப் படகுகளும், 2000 ஃபைபர் படகுகளும் தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கான மீன் இறைச்சி தேவையை இவர்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30,000 வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காசிமேடு மீனவர்களின் மீன்களை நம்பியுள்ளனர்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றாலும், இவர்களது வாழ்விடம் ஆந்திராவை ஒட்டி இருப்பதால், எப்போதும்போல் தமிழ் நாடு மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் அமைதியாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக ஆந்திர மீனவர்களும், தமிழக மீனவர்களும் சகோதரர்களாக மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். தமிழக மீன்பிடி படகுகளில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த 7 விசைப் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இன்றுவரை அந்த 7 விசைப் படகுகளை ஆந்திர அரசு விடுவிக்கவில்லை. காசிமேடு

மீனவர்கள், தவெக அரசு மற்றும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தமிழக அரசு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காசிமேடு மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT