எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

 
தமிழகம்

“தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதைக் கண்டு மக்கள் திகைப்பு” - அரசு மீது பழனிசாமி விமர்சனம்

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்து போய் நிற்கின்றனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளி கொலை (வேளச்சேரி), பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக் கொலை (ஓமலூர்), தனியாக வசித்த மூதாட்டி, நகைகளுக்காக வெட்டிக் கொலை (கிச்சிப்பாளையம் - சேலம்) திருட்டு பைக் விற்று வந்த பணத்தை பிரிப்பதில் தகறாறு ஏற்பட்டு கொலை (திருத்தணி), சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை (திண்டுக்கல்), நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு வெளியே வந்தவர், பட்டப் பகலில் படுகொலை (திருநெல்வேலி), ரயில் நிலையத்தில் மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் (எண்ணூர்) என்ற செய்திகளே தினமும் கண்ணில் படுகின்றன.

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவருடன் தனிமையில் இருந்த வீடியோக்களை கணவரே வெளியிட்டது குறித்தும், தன் கணவனுக்கு சுமார் 27 பெண்களுடன் தகாத உறவு இருந்தது குறித்தும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தால், அதை காவல்துறை ஏற்க மறுத்ததுடன், தன்னை மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பெண்ணுக்கு திருமணமான பதினைந்தே நாளில் நடந்திருக்கிறது என்பதுதான் கொடுமையின் உச்சம்.

நேற்று கூட தலைநகர் சென்னை, திருவொற்றியூரில் 6 வயது வடமாநில சிறுமியை இளைஞர்கள் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. குதிரை பேர ஆட்சியில் சிங்கப் பெண்கள் படை என்பது ரீல்ஸ் என்பதையே தினமும் நடக்கும் பாலியல் குற்றங்கள் அம்பலப்படுத்துகின்றன.

வீட்டுக்கு வீடு விஜய் இருக்கிறார், அண்ணனாக பாதுகாப்பு கொடுப்பேன் என்று டயலாக் பேசுவது மட்டும் போதாது. நிஜமாகவே நல்லாட்சி கொடுப்பதற்கு திறன் இருக்க வேண்டும். தவெக அரசின், முதல்வர் விஜய் ஆட்சியில் கடந்த 5 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றம் செய்பவர்களை உடனடியாகப் பிடிப்பதற்கும் முயற்சி செய்யாமல், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு, அவர்கள் மீதே பழிபோடும் வேலையையும் ஒருசில அமைச்சர்கள் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்துக்குரியது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பி தவெகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது ரத்த ஆறு ஓடுவது கண்டு திகைத்துப் போய் நிற்கிறார்கள். ஆடு, மாடுகளை வெட்டுவது போல், மனிதர்களை அலட்சியமாக நடுரோட்டில் வெட்டி வீசி, சாலைகளில் இரத்த ஆறு ஓடும் அவலமும், குற்றவாளிகள் ராஜநடை போட்டுச் செல்லும் அவலமும் தற்போதைய தவெக ஆட்சியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களை தொடர்ந்து எப்படி ஏமாற்றலாம்; ஆட்சியை எப்படி தக்க வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தும் முதல்வர் விஜய், அவருடைய கையில்தான் தமிழகக் காவல்துறை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தில் பணியாற்றும் காவலர்கள் தன் பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை முதல்வர் விஜய் கைவிட்டுவிட்டு, கொலை பாதகர்களின் கொடும்பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காக்கவும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கையில் தமிழகக் காவல் துறையை முனைப்புடன் ஈடுபடுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT