மதுரையில் தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பழனிசாமிக்கு அஜித் புகைப்படத்தை பரிசளித்த தொண்டர்கள்

 
தமிழகம்

“அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கஞ்சா அடியோடு ஒழிக்கப்படும்” - பழனிசாமி உறுதி

செய்திப்பிரிவு

மதுரை: அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கஞ்சா அடியோடு ஒழிக்கப்படும் என மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கம்பம், போடி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களான லோகிராஜன், எஸ்டிகே.ஜக்கையன், விடி.நாராயணசாமி, பெரியகுளம் (தனி) தொகுதியில் அமமுக வேட்பாளர் கதிர்காமு ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் டிடிவி.தினகரனுடன் இணைந்தும், மதுரை பழங்காநத்தம், உசிலம்பட்டி, செக்கானூரணி பகுதியில் மதுரை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் செல்லூர் கே.ராஜூ (மதுரை மேற்கு), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), வி.வி.ராஜன்செல்லப்பா (திருப்பரங்குன்றம்), டாக்டர் சரவணன் (மதுரை வடக்கு), பெரிபுள்ளான் என்ற செல்வம் (மேலூர்), கே.மகேந்திரன் (மதுரை கிழக்கு), இ.மகேந்திரன் (உசிலம்பட்டி), கே.மாணிக்கம் (சோழவந்தான்), சுந்தர்.சி (மதுரை மத்தி- புதிய நீதி கட்சி), ராம.சீனிவாசன் ( மதுரை தெற்கு- பாஜக) ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார்.

          

அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பழைய திமுகவை பார்க்க வேண்டுமா? என வீரவசனம் பேசியுள்ளார். ஸ்டாலின் நிலையை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக உள்ளது.

ஸ்டாலின் டம்மி பீஸ். திமுக ஆட்சியில் அவரால் மதுரை மண்ணில் நுழைய முடியவில்லை. அப்படிப்பட்டவர் வீர வசனம் பேசுவதை விட்டு விட வேண்டும். மதுரையில் மாநகராட்சி மேயரின் கணவரை சொத்து வரி முறைகேட்டில் கைது செய்துள்ளனர். மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் திமுக அரசு தேவையா?

அமைச்சர் நேரு மீது நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவு துறையில் நடைபெற்ற முறைகேடும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் ஊழல் குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் ஸ்டாலினுக்கு ஆப்பு அடித்துவிட்டார். அதிமுக அரசின் நடவடிக்கைக்கு பிரதமர் பச்சைக்கொடி காட்டிவிட்டார். இனி திமுகவினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும்.

ஸ்டாலி்ன் என் மீது கொலை வெறியில் உள்ளார். கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாக ஆ.ராசா பேசிய ஆடியோ வெளியானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஸ்டாலின் என் மீது பாய்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் போது ஸ்டாலின் கூறினார். அதேபோல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

உதயநிதியும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பேசிய ஆடியோ வெளியானது. அமைச்சர் பேசியிருப்பதால் அதில் உண்மையிருக்கும். இதிலிருந்து ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடு ஈர்க்கப்போகவில்லை, தொழிலில் முதலீடு செய்ய போயுள்ளார்.

அரசு ஊழியர்கள் நாளை முதல் வாக்களிக்கவுள்ளனர். அரசின் சட்ட, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், தற்போதுள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டங்களில் தேவையான திருத்தங்கள் கொண்டு வந்து சீரமைக்கப்படும் என சொல்லியுள்ளோம். அரசு ஊழியர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு கொடுக்கும் கட்சி அதிமுக.

நான் முதல்வராக பொறுப்பேற்ற போது கட்சியில் பிரச்சினை, இயற்றை சீற்றம், கரோனா. இருப்பினும் சிறப்பாக ஆட்சி நடத்தினேன். கட்சிக்குள் சிலர் பி டீமாக செயல்பட்டனர். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கட்சிக்குள் இருந்து கட்சியை முடக்க நினைத்தவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளேன். அதிமுக ஆட்சியை பொற்கால ஆட்சியாக மக்கள் கூறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மத்திய மத்திய அரசை குறை சொல்கிறார். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது, தேவையான திட்டங்களையும், நிதியையும் தரவில்லை என பச்சை பொய் சொல்கிறார். திமுக 15 ஆண்டு காலம் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழகத்துக்கு என்னத் திட்டம் கொண்டு வந்தீர்கள். எவ்வளவு நிதி பெற்றுத்தந்தீர்கள்? எங்கள் ஆட்சியில் மத்திய அரசு கேட்டதை எல்லாம் தந்தது.

மதுரை எய்ம்ஸ் உட்பட பல்வேறு திட்டங்கள் வந்தது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளுது. இருப்பினும் மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை ஒதுக்காமல் திமுக ஆட்சியில் விரிவாக்கத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். திமுக அரசு சரியாக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதால் பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் 73 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளது. இந்த காலத்தில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 5 ஆண்டில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களை கடன்காரர்களாக ஆக்கியது தான் திமுக அரசின் சாதனை. முதல்வருக்கு எதுவும் தெரியாது. பொம்மை முதல்வராக உள்ளார். நாட்டின் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான். சொந்தக் கட்சி சின்னம் தெரியாமல் பிரச்சாரம் செய்கிறார். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா?

அதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. ஒரு குடும்பத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக. குடும்பத்திற்கு என்ன திட்டம் தேவையோ, அந்த திட்டத்தை செயல்படுத்தி கொள்ளையடிக்கிற கட்சியாக திமுக உள்ளது. இதுவே திமுகவிற்கும், அதிமுகவிற்கும் உள்ள வேறுபாடு. எம்ஜிஆர் இருக்கும் போது தீயசக்தி திமுகவை வேறுடன் அழிக்க வேண்டும் என சபதம் செய்தார். எம்ஜிஆருக்கு பின்னால் ஜெயலலிதா கட்சியை காப்பாற்றினார். அந்த இரண்டு தலைவர்களுக்கும் நாம்தான் பிள்ளைகள். அவர்கள் இந்த பூமியில் இருந்து மறைந்தாலும் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசியோடுதான் அதிமுக இயங்கி கொண்டிருக்கிறது. அதிமுகவை உடைக்க எத்தனையோ சூழ்ச்சிகள் நடந்தது. அந்த சூழ்ச்சிகள் அனைத்தும் தூள் தூள் ஆக்கப்பட்டது.

புது பொலிவுடன் அதிமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. இனி எந்த கொம்பனாலும் அதிமுவை அசைக்க முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தபோது விலைவாசி விண்ணைமுட்டுகிற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசியை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் உணவுபொருட்கள் விலை குறைவாக இருக்கிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்து விலை உயராமல் பார்த்துக் கொண்டோம். மின் கட்டணம் 67 சதவீதம் உயர்வு, சொத்து வரி 100 சதவீதம் உயர்வு என இப்படி ஒரு பக்கம் வரி உயர்வு மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் 525 தேர்தல் அறிவிப்புகளில், அவர்களின் 5 ஆண்டு ஆட்சியில் 4-ல் ஒரு பங்கு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். அனைத்து குடும்ப அட்டைகள் உள்வர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு பட்டு புடவைகள் வழங்கப்படும்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பராமரிப்புப் பணி தொடங்கிய நேரத்தில் ஆட்சி மாறியது. அதன் பின்பு வந்த திமுக இதைச் செயல்படுத்தவில்லை. திமுகவின் கூட்டணி கட்சி கேரளத்தில் ஆட்சி செய்யும் போது அவர்களுடன் பேசி பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையையும் திமுக எடுக்கவில்லை. அந்தளவுக்கு விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாக திமுக இருக்கிறது” இவ்வாறு பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT