தமிழகம்

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் - பழனிசாமி உறுதி

செய்திப்பிரிவு

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணியில் 13 இடங்களில் அதிமுகவும், தலா ஒரு இடத்தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.

          

இவர்களை ஆதரித்து வேளச்சேரி தொகுதியில் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது: வெயில் நேரத்தில் வந்திருக்கிறோம். வருண பகவான் நமக்கு வெயிலைக் குறைத்திருக்கிறார். இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக எனும் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் மக்கள் பட்டது துன்பம், வேதனை மட்டும்தான். அதிமுக ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருந்தது. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்கே தவறு நடந்தாலும், அதை தடுத்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது.திமுக அரசுக்கு விலை ஏற்றம் பற்றியோ, மக்களை பற்றியோ கவலை இல்லை. எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் தனது குடும்பத்தைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுவார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, பெரும்பாலும் கஞ்சா விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் துணை நிற்பதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. திமுக ஆட்சி இருக்கும் வரை கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாது.

திமுக ஆட்சியில் கருணாநிதியாக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும் குடும்ப ஆட்சி தான். 4 அதிகார மையங்கள். அவர்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டு, மக்களுக்கு துன்பத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஏழை மக்களுக்கான திட்டங்களை கொடுக்க அதிமுக அரசு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றித்தரும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் பழனிசாமி பேசுகையில், ‘‘ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. யார் அந்த சார்? அந்த சார் போய் குற்றவாளி வீட்டில் மூக்குபிடிக்க பிரியாணி சாப்பிட்டார். இப்படி இருந்தால் குற்றச் செயலை எப்படி தடுக்க முடியும்? அதிமுக ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார்? என்று கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுகவில் பாதி பேர் அதிமுகதான். 8 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் திமுகவில் ஆளில்லை. யாரையெல்லாம் கட்சியிலிருந்து நீக்கினோமோ, அவர்கள் அங்கே போய் அடைக்கலமாகி மந்திரியாகிவிட்டனர். செல்லாத ஓட்டுக்கு வேல்யூ உண்டா? நாம் செல்லாத ஓட்டு என்று தூக்கியெறிந்தவர்களை அங்கே தூக்கி வைத்துள்ளனர். இப்போது 19 அதிமுகவினர் திமுகவில் எம்எல்ஏ வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஏனென்றால் அங்கே ஆளில்லை. அதனால் அதிமுகவில் ஒதுக்கப்பட்டவர்கள் சீட் வாங்கி நிற்கிறார்கள்’’ என்றார். மாலையில், தியாகராயநகர்,அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொகுதி மறுவரையறையால் பிரச்சினை இல்லை

தி.நகரில் பேசிய பழனிசாமி, ‘‘தொகுதிமறுவரையறையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால், தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. ஆனால், இது தொடர்பாக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார். திமுக அரசின் தோல்விகளை மறைக்க தொகுதி மறுவரையறையால் ஆபத்து என்கிறார். தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின்’’ என்றார்.

SCROLL FOR NEXT