அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல இருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து நேற்று நண்பகல் 12.40 மணிக்கு திருச்சிக்கு கிளம்பும் பயணிகள் விமானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல இருந்தார். அதே விமானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தின்போது பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் இடையே கடுமையான வார்த்தைப் போர் நிலவி வரும் நிலையில், இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்த உதயநிதி ஸ்டாலின், பிற்பகலில் தனி விமானத்தில் சென்றார். அதேநேரம் திட்டமிட்டபடி அதே விமானத்தில் பழனிசாமி திருச்சிக்கு பயணம் செய்தார்.