சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு, பொங்கலுக்கு தரமான வேட்டி, சேலை வழங்கப்போவதாக அறிவித்தது.
8 முழ வேட்டியை 4 முழமாக்கி, ஒருசில மாறுதல்களைச் செய்து, சுமார் 4 மாத தாமதத்துக்கு பிறகு தற்போதுதான் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை நெய்வதற்கு ஆணை வழங்க முடிவு எடுத் துள்ளது.
பொதுவாக, இலவச வேட்டி, சேலை நெய்யும் ஆர்டர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்படும்.
தற்போது, வேட்டி, சேலை டிசைன்களில் மாற்றங்கள் பற்றி முடிவெடுக்க தாமதமானதால், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் ஆர்டரை ‘ஆட்டோலூம்’ தொழில் நடத்துபவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தாக, தமிழ்நாடு விசைத்தறிச் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
அரசின் தாமதத்தால், விசைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவது எப்படி நியாயமாகும்? இதனால் சுமார் 5 லட்சம் கைத்தறி, விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக மக்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத ஒரு ஆட்சியாளர் களை இப்போதுதான் தமிழகம் சந்திக்கிறது.
எனவே, கைத்தறி, விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காமல்; உரிய நேரத்தில் பொங்கலுக்கான வேட்டி, சேலைகளை வழங்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.