அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்ற தொண்டர்கள். படம்: ம.பிரபு
எஸ்ஐஆர் பணியில், அதிமுகவினர் ஒருவர் பெயரும் விடுபடாத வகையில் மாவட்ட செயலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது. எஸ்ஐஆர் பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில், படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாமல் அளித்த 12 லட்சம் பேரிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று, மாவட்ட வாரியாக நடைபெற்று வரும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், கட்சியினர் அனைவரும் தீவிர களப்பணியாற்ற வேண்டும். எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் அதிமுகவினர் சிறப்பாக செயல்படவில்லை என தகவல்கள் வருகின்றன. வாக்குச்சாவடி அளவில் நிர்வாகிகள் தீவிர பணியாற்றுவதை மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் நிரந்தரமாக குடியேறியதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 66 லட்சம் பேரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, வாக்குச்சாவடி முகவர்கள், பாக கிளை நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அதிமுகவினர் ஒருவர் பெயரும் விட்டுவிடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இறந்தவர்கள் உள்ளிட்டோரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திமுகவினர் முயலக்கூடும். அதை அதிமுகவினர் தடுக்க வேண்டும். முறையாக படிவங்களை பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் பொதுமக்கள், அதிமுகவினர் ஒருவரின் பெயரும் நிராகரிக்காமல், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீடிக்க, தேவையான ஆதாரங்களை எடுத்து தந்து உதவ வேண்டும். வரும் ஜன.3, 4 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதை ஆக்கப்பூர்வமாக அதிமுகவினர் பயன்படுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஐடி விங் நிர்வாகிகளின் பணி திருப்திகரமாக இல்லை. பிற கட்சிகளின் வேகத்தை மிஞ்சும் வகையில் அதிமுகவின் செயல்பாடுகள் மக்களை சென்றடைய வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு இந்த விங் முக்கிய பங்காற்ற வேண்டும். திமுகவில் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை விட, அதிமுக முகவர்கள் குறைவாக உள்ளனர். திமுகவை விட அதிக முகவர்களை விரைவாக நியமிக்க வேண்டும். தொகுதி மக்களுடன் அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். தொகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கிராமப் புறங்களில் எதிர்மறை கருத்துகள் உள்ளன. பொது எதிரியை வீழ்த்துவதற்கான கூட்டணி இது என்பதை மக்களை சந்தித்து விளக்க வேண்டும். அதிமுக அரசின் 10 ஆண்டு சாதனைகள், எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்படுத்திய முத்தான திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அத்திட்டங்கள் மூலம் அவர்கள் பயன்பெற்றிருப்பதை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தங்களது மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின்வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 6 பேர் கொண்ட பட்டியலை தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்களின் பரிந்துரை, மாவட்ட பொறுப்பாளர்களின் பரிந்துரை, தொகுதியில் வேட்பாளரின் செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டி இருக்கும். அதை ஏற்றுக்கொண்டு, கூட்டணி வெற்றிக்கு மாவட்ட செயலாளர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் மற்றும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள், பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.