தமிழகம்

வெற்றியைத் தக்கவைக்க தொகுதிகள் ஒதுக்கீட்டில் சாதுர்யமாகச் செயல்பட்ட பழனிசாமி

எஸ்.விஜயகுமார்

கடந்த தேர்தலில் அதிமுக-வுக்கு பெரிதும் கைகொடுத்த கொங்கு மண்டலம் மற்றும் சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டிருப்பதாக அவரது கட்சியினரே சிலாகித்துச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், “கடந்த முறை கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகளை மீண்டும் அவர்களுக்கே கொடுத்து அவர்களை வளர்த்துவிட விரும்பாத பழனிசாமி, முடிந்தவரைக்கும் தொகுதிகளை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், மொத்தமுள்ள 11 தொகுதிகளில் கடந்த முறை அதிமுக 9 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியான பாமக சேலம் மேற்கு, மேட்டூர் என 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அப்போது 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி அள்ளிய போதும் சேலம் வடக்கை மட்டும் திமுக-விடம் இருந்து மீட்க முடியவில்லை.

          

இப்போது சேலம் வடக்கு எம்எல்ஏ-வான ராஜேந்திரன் அமைச்சராகவும் இருக்கிறார். அதனால் அவருடன் மோதி விஷப்பரீட்சை செய்ய வேண்டாம் என முடிவெடுத்த பழனிசாமி, அந்தத் தொகுதியை இம்முறை பாமக-வுக்கு ஒதுக்கிவிட்டார். அதற்குப் பதிலாக, கடந்த முறை பாமக வென்ற மேட்டூர் தொகுதியை அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை சேலம் மேற்கில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாமக அருள் இப்போது ராமதாஸ் பக்கம் இருக்கிறார்.

அதனால் நிச்சயம் அவர் எப்படியும் அங்கே போட்டியிடலாம் என ஊகித்த பழனிசாமி, சிதறிப் போகும் பாமக வாக்கு வங்கியை நம்பி பரிசோதனை செய்ய விரும்பாமல் அந்தத் தொகுதியை அன்புமணிக்கே தந்துவிட்டார். அருளை வீழ்த்த அருமையான சான்ஸ் என நினைத்து அன்புமணியும் இதற்கு சம்மதித்து விட்டார்.

ஆனால், உங்கள் பஞ்சாயத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என பழனிசாமி மிகவும் தந்திரமாக தொகுதியை அன்புமணி பக்கம் தள்ளிவிட்டுவிட்டார் என்பது தான் யதார்த்தம். தனது சாதுர்யமான இந்த நடவடிக்கைகள் மூலம் சேலத்தில் மீண்டும் அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றும் சூழலை உருவாக்கி இருக்கிறார் பழனிசாமி.

இது போலவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளை மீண்டும் பாமக-வுக்கே தந்துவிட்டார் பழனிசாமி. இதில் பென்னாகரம் ஜி.கே.மணியின் தொகுதி என்பதால் இம்முறை அங்கே பாமக அணிகளுக்குள்ளேயே குஸ்தி நடக்கலாம் என்பது பழனிசாமியின் கணிப்பு. அதனால், அங்கே அதிமுக வேட்பாளரை நிறுத்தி பதம்பார்க்க அவர் விரும்பவில்லை.

கொங்கு மண்டலத்திலும் இதே நிலை தான். கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை அதிமுக 9 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதில் கோவை தெற்கை இம்முறை பாஜக வசம் இருந்து சாதுர்யமாக திரும்பப் பெற்றுவிட்டார் பழனிசாமி. அதற்குப் பதிலாக கோவை வடக்கை பாஜக-வுக்கு ஒதுக்கி இருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் கடந்த முறை அதிமுக 4 தொகுதிகளிலும் பாஜக 1 தொகுதியிலும் வென்றன. இம்முறையும் அங்கே மொடக்குறிச்சியை பாஜக-வுக்கே தந்துவிட்டவர், ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துசாமியிடம் மோத விரும்பாமல் அந்தத் தொகுதியை தமாகா-வுக்கு தந்துவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோற்றுப் போனது பாஜக. அதனால் தைரியமாக அந்தத் தொகுதியை அவர்கள் பக்கமே தள்ளிவிட்டிருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்திலும் அமைச்சர் மதிவேந்தனின் தொகுதியான ராசிபுரத்தை பாஜக-வுக்கு ஒதுக்கிவிட்டார் பழனிசாமி. தனது இந்த நடவடிக்கைகள் மூலம் அதிமுக-வுக்கு செல்வாக்கான சேலம் மற்றும் கொங்கு மண்டலத்தில் வெற்றியை தக்கவைப்பதற்கான வேலைகளை சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கும் பழனிசாமி, ஓபிஎஸ் விவகாரத்தால் தனக்கு சாதகமாக இருக்காது என நினைக்கும் தென் மாவட்டங்களில் பாஜக-வுக்கும் தினகரனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொகுதிகளை ஒதுக்கியும் சரிவை சமாளித்திருக்கிறார்” என்றனர்.

SCROLL FOR NEXT