சீமான் | கோப்புப்படம் 
தமிழகம்

ஜபல்பூர் படகு விபத்து: சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய சீமான் வலியுறுத்தல்

வெற்றி மயிலோன்

சென்னை: “கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத் தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என ஜபல்பூரில் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29 பேர் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில், அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களில் இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த சகோதரர் காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, மகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். இந்திய துணைக் கண்டம் முழுதும் கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தொடர்புடைய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். மத்தியப் பிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT