சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கையில் 2-வது சுற்று கலந்தாய்வில் 40,299 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவருமான பி.ரத்தினசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.
இதில் 2-வது சுற்று கலந்தாய்வில் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அவகாசம் 8-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணைகளும், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,548 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளும் 9-ம் தேதி (நேற்று) வழங்கப்பட்டன.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்துக்கும், நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்கும் ஆக.13-ம் தேதிக்குள் சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், அவர்களுக்கான ஒதுக்கீடு தானாகவே ரத்தாகிவிடும். அதே சுற்றில் மேல்நோக்கிய நகர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
துணை கலந்தாய்வு விண்ணப்பம்
இளநிலை கட்டிடக் கலை படிப்புக்கான (பி.ஆர்க்.) கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 622 மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவில் 40 பேரும் ஒதுக்கீட்டு ஆணை பெற்றுள்ளனர்.
பொறியியல் மாணவர்களுக்கு கடைசியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன்கொடுக்கப்பட்டுள்ளன.
பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வுக்கு பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களும், பொதுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் ஆக.17 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான துணைக் கலந்தாய்வு செப்.3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.