அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனையானது, தங்க நகை வியாபாரம், இரும்பு மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்ளும் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எங்கெல்லாம் சோதனை? சென்னை சவுகார்பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள பவர்லால் முத்தா என்ற தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல் கீழ்ப்பாக்கம் வேடலஸ் சாலையில் சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் இரும்பு மொத்த வியாபாரம் செய்யும் நிர்மல் குமார் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேகே நகர் முனுசாமி சாலை மற்றும் மற்றும் லட்சுமண சாமி சாலையில் தங்க நகை வியாபாரி மஹாவீர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
எம்ஜிஆர் நகர், அண்ணா பிரதான சாலையில் உள்ள ஒரு முகவரியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாட வீதியில் உள்ள ஷாம் தர்பார் அபார்ட்மெண்ட்டில் தொழிலதிபர் கலைச்செல்வன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, அம்பத்தூர் திருவேங்கட நகர் ஆர்க் டெக் ரெசிடென்சி என்ற முகவரியில் வழக்கறிஞர் பிரகாஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.