சென்னை: அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். தமிழகத்தில் நடைபெற்றுள்ள முக்கியமான பணமோசடி வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தொடர்பான பணமோசடி வழக்குகள் சூடுபிடித்துள்ளன.
ஏற்கெனவே, நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப்பொறியாளர் பணியிடங்களுக் கான ஆள்சேர்ப்பில் முறைகேடு, டெண்டர் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரில், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
மேலும், அமலாக்கத் துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் முதல்நிலை விசாரணைக்கு போதுமானதாக இருப்பதாகவும், மாநில அரசு இந்த விவகாரத்தில் விசாரணையைத் தாமதப்படுத்துவதாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறையின் அகில இந்திய இயக்குநர் ராகுல் நவீன் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். 2 நாள் பயணமாக வந்துள்ள அவர், தமிழகத்தில் நிலுவையில் உள்ள பணமோசடி தொடர்பான உயர்மட்ட வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் உள்ள தென்மண்டல அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும், சனிக்கிழமை வரை தங்கியிருந்துஆய்வுகளை முடித்துக்கொண்டு டெல்லி திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான புகார் தொடர்பாக அமலாக்கத் துறை திரட்டியுள்ள ஆதாரங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ராகுல் நவீன் ஆய்வு செய்வார் என தெரிகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சென்னையில் உள்ள 2 மண்டல அலுவலகங்கள் மற்றும் பிறதுணை மண்டல பிரிவுகளின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்துவது குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.