சென்னை: தியாகராய நகர் பர்கிட் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.8.30 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தியாகராய நகர் பர்கிட் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 4,061 சதுரஅடி நிலம் மீட்கப்பட்டது.
சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு நேற்று கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.30 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மீட்கப்படும் சொத்துகளை மீண்டும் கோயில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைத்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.