சென்னை: நில அளவைத்துறையில் பதவி உயர்வு, பணியிட மாறுதல் தொடங்கி பல்வேறு நிர்வாகப் பணிகளுக்கு லஞ்சம் வசூலிக்கப்படுவதாக அதன் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அரசு நில அளவைத் துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: பதவி உயர்வு பெறும் அலுவலர்களுக்கு அருகில் உள்ள வட்டங்களில் பணிவழங்க ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இடத்துக்கேற்ப பணம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தொலைதூரங்களில் உள்ள வட்டங்களில் பணி செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் அல்லது ஏதேனும் காரணம் காட்டி பதவி உயர்வு தள்ளிப்போடப்படுகிறது.
இதுதவிர, மாவட்டம்விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறும் நபர்களிடம் இருந்து 3 முதல் 6 மாதம் வரை சம்பளம் போடாமல் வைத்து பணம் கொடுத்தால்தான் சம்பளம் போடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
வேறு ஏதும் அரசுப் பணிக்கு தடையில்லாச் சான்று கேட்டு விண்ணப்பித்தால் அதற்கும் பணம் கொடுக்க வற்புறுத்துகிறார்கள். துறை அலுவலர்கள் பாதிப்பு அதேபோல், பல்வேறு மாவட்டங்களில் லஞ்சம் பெறாமல் நேர்மையாக செயல்படும் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கப்படுகிறது.
அவர்கள் பணியில் சிறு தவறு செய்தால்கூட துறைரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சிக்கல்களால் அளவைத் துறை அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றைக் களைய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.